search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி கடும் தட்டுப்பாடு

    சென்னையில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாநகராட்சி ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 3600 அரசு முகாம்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இப்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், விடுபட்ட முன்கள பணியாளர்களுக்கும் ஊசி போடப்படுகிறது. அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு ஊசி போடப்படுகிறது.

    சென்னையில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாநகராட்சி ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்படுகிறது. 

    ஆரம்பத்தில் 10 பேர் முதல் 100 பேர் வரை மட்டுமே வந்தார்கள். இப்போது கொரோனா 2-வது அலை தீவிரமாகி இருப்பதால் மக்களிடம் தடுப்பூசி போட ஆர்வம் அதிகரித்துள்ளது.

    ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் நேற்று ஒரேநாளில் 1200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மரக்காணம் அரசு மருத்துவமனை, நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் இருப்பில் இல்லை என்றும், 2 நாட்கள் கழித்து வந்து தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள் என்றும் கூறி திருப்பி அனுப்பி வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அதிகமானோர் கூடி இருந்தனர். ஆனால் கொரோனா தடுப்பூசிகளான கோவேக்சின், கோவிஷீல்டு இரண்டுமே இல்லை என்று டாக்டர்கள் கூறியதும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் புறநகர் பகுதியில் செயல்படும் அரசு ஆஸ்பத்திரிகளில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா ஊசி போடுவதற்காக வருகிறார்கள். அவர்களில் 200 பேருக்கு மட்டுமே ஊசி போடப்பட்டு வருகிறது. மீதி 100 பேர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.  

    ஆரம்ப சுகாதார நிலையம்

    நீலகிரியில் கொரோனா தடுப்பூசி அரசு ஆஸ்பத்தி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 36 இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. 

    மதுரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 83 ஆயிரத்து 186 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையே மதுரை மருத்துவக்கல்லூரி மற்றும் மாவட்ட அரசு மற்றும் சுகாதார மையங்களில் 980 தடுப்பூசிகள் மட்டும் இருப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதன்காரணமாக தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    சேலம் மாவட்டத்தில் 285 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. கோவிஷீல்டு முதல் டோஸ், 2 லட்சத்து 2,937 பேருக்கும், 2-வது டோஸ் 39 ஆயிரத்து, 148 பேர் என 2 லட்சத்து 42 ஆயிரத்து, 85 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கோவாக்சின் முதல் டோஸ் 31 ஆயிரத்து, 976 பேர், 2-வது டோஸ் 1,073 பேர் என 33 ஆயிரத்து  49 பேருக்கு போடப்பட்டுள்ளன. 

    தற்போது மாவட்டத்தில் பரவலாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல பகுதிகளில் ஆதார் அட்டையுடன் தடுப்பூசி போட வரும் மக்கள் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது. சேலம் அரசு ஆஸ்பத்திரி தவிர மற்ற இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தாராளமாக போடப்படுகிறது. அதற்கான உரிய பணம் கொடுத்து சிலர் தடுப்பூசி போடுகின்றனர். 

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 19 ஆயிரம் பேர், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்  86ஆயிரம் பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 5ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழா காரணமாக அவினாசி, பல்லடம், உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினர். 

    நெல்லை மாவட்டத்தில் இதுவரை 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.  நேற்று 3 ஆயிரம் டோஸ்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இறங்கியது. ஆனாலும் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் முன்கள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. முதலில் கோவிஷீல்டு தடுப்பூசியை அதிகம் பேர் விரும்பி போட்டு வந்தனர். ஆனால் தற்போது கோவேக்சின் தடுப்பூசிக்கு மவுசு அதிகரித்துள்ளது. நெல்லை பல்நோக்கு மருத்துவமனையில் மட்டும் கோவேக்சின் தடுப்பூசி சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கும், கோவிஷீல்டு தடுப்பூசி 11 ஆயிரம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் முன்கள பணியாளர்களுக்கு போடுவதற்கே கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. மொத்தம் உள்ள 11 பிளாக்குகளிலும் நிலவும் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போட வரும் பெரும்பாலான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மாவட்டத்தில் இதுவரை 46 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் மொத்தம் 20 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மாநகர பகுதியில் மட்டும் 7 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனாலும் தட்டுப்பாடு காரணமாக பல மையங்களில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் 18 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இதில் 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் 5 லட்சத்து 9 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது தவிர முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியாற்றியவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பூசி போடப்படுகிறது.

    இதுவரை மாவட்டம் முழுவதும் 88,590 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இப்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    நேற்று முன்தினம் முதல் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் நேற்று 3 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வரவழைக்கப்பட்டது. என்றாலும் தடுப்பூசி போட முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி நேற்று முன்தினமே முடிந்துவிட்டது. நத்தம், பழனி, வேடசந்தூர் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் ஊசி இல்லாததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 

    கொடைக்கானல் தாலுகா அளவில் இதுவரை 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். 

    தேனி மாவட்டத்தில் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்த அளவு தடுப்பூசிகளே உள்ளது. இதனால் அங்கு வந்த பொதுமக்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று வந்த மக்கள் நீண்டதூரம் செல்ல வேண்டும் என்பதால் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    தருமபுரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரூர் அரசு மருத்துவமனை தருமபுரி நகர ஆரம்ப சுகாதார நிலையம், மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, ஜக்கசமுத்திரம், தீர்த்தமலை, சின்னகுப்பம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    திருவண்ணாமலையில் 4 லட்சத்து 61 ஆயிரத்து 871 பேரில் 22 ஆயிரத்து 816 பேருக்கு மட்டுமே போடப்பட்டு உள்ளது. இங்கு மருந்து தட்டுப்பாடு இல்லை.

    திருப்பத்தூரில் 2 தடுப்பூசிகளும் இல்லை. வந்த பிறகு போடப்படும் என்று திருப்பி அனுப்புகிறார்கள்.

    காஞ்சிபுரத்தில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவேக்சின் இல்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
    Next Story
    ×