search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் 2-வது முறையாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    சென்னை: 

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வைரஸ் தொற்றின் பரவல் பல மடங்கு வேகமாக உயர்ந்துள்ளது. 

    இன்று தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டிவிட்டது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது.

    இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தேர்தல் முடிந்த உடன் தீவிரப்படுத்தியது. சட்டமன்ற தேர்தல் 6-ந்தேதி முடிவடைந்த நிலையில் கடந்த 8-ந்தேதியன்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இதன்படி கடந்த 10-ந்தேதி முதல் ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே  பங்கு பெற வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    மத்திய அரசு

    இதற்கிடையே கொரோனா பரவல் வேகம் அதிகரித்ததால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் அமல்படுத்த மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதைதொடர்ந்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நிபுணர் குழுவினருடன் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 2 தடவை ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மருத்துவ குழுவினர் பல்வேறு புதிய பரிந்துரைகளை வழங்கினார்கள். குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வர கேட்டுக்கொண்டனர்

    இதையடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 4 நாட்களாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

    இந்தநிலையில் சேலத்தில் இருந்து சென்னை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவலை கட்டுப்படுத்த  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் உடனடியாக எந்த அறிவிப்புகளையும் அவரும் வெளியிடவில்லை.

    அவர் சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை அவர் மீண்டும் சேலத்தில் இருந்து சென்னை வந்தார். அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று அவர் 2-வது முறையாக ஆலோசனை மேற்கொண்டார். காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    தினசரி பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்து வருவதால், அதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார்.

    அப்போது அதிகாரிகள் தரப்பில் மேலும் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவிப்பு வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பொதுமக்கள் மெரினாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

    வார  இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் மக்கள் கொரோனாவை மறந்து அதிகளவில் கூடினார்கள். இதனை கருத்தில் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதனால் கடந்த வாரம் மெரினாவுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த வாரம் நேற்றும் இன்றும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதுபோன்று வார இறுதி நாட்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தலாமா? என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்பான முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×