search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் கொ.ம.தே.க. சார்பில் நடந்த மாநகர் மாவட்டக்குழு கூட்டத்தில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியபோது எடுத்த படம்.
    X
    திருப்பூரில் கொ.ம.தே.க. சார்பில் நடந்த மாநகர் மாவட்டக்குழு கூட்டத்தில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியபோது எடுத்த படம்.

    தட்டுப்பாடு இல்லாமல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி

    தட்டுப்பாடு இல்லாமல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
    திருப்பூர்:

    கொ.ம.தே.க. பொதுச்செயலளாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று காலை திருப்பூர் குமார் நகரில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழாவையொட்டி உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து மாநகர் மாவட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ரோபா ரவிச்சந்திரன், தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் வேலுமணி, துணை செயலாளர் தம்பி வெங்கடாசலம், மண்டல செயலாளர்கள் பொன்னுசாமி, கனகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஈ.ஆர். ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தீரன்சின்னமலையின் பெருமையை போற்றும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் அவருடைய உருவ படத்தை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். மே மாதம் 2-ந் தேதிக்கு பிறகு அமைய இருக்கிற புதிய அரசு, சட்டமன்றத்தில் தீரன் சின்னமலை உருவ படத்தை வைக்க வேண்டும். நடிகர் விவேக் மாரடைப்பால் மறைந்துள்ளார். கொரோனா தடுப்பூசி அனைவரும் போட வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன்பிறகு இறந்துள்ளார். அவருடைய இறப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று டாக்டர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். மக்கள் தயங்காமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    கொரோனா முதல் அலை பரவிய காலத்துக்கு பிறகாவது தடுப்பூசியை அனைவருக்கும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா தடுப்பூசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தார்கள். இப்போது 2-வது அலை ஏற்பட்டு அதிகமாக பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    திருப்பூரில் நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்து வருகிறார்கள். உற்பத்தியாளர்கள் ஆர்டர்களை எடுக்க தயங்குகிறார்கள். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி சீரான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக மக்களிடம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருப்பதை பார்க்க முடிகிறது.

    வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அ.தி.மு.க. கட்சி வேட்பாளர்களின் முகவர்களை பெரும்பாலான வாக்கு எண்ணும் மையத்தில் காண முடிவதில்லை. இது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×