search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் 50 சதவீத விவசாயிகளுக்கு அனுமதி

    சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 50 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே சுழற்சி முறையில் வியாபாரம் செய்ய அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர்.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி ஆகிய 4 உழவர் சந்தைகளிலும் தினமும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். பல ஆயிரம் பேர் காய்கறிகளை வாங்கி செல்வார்கள். தற்போது கொரோனா கட்டுப்பாட்டால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 100 விவசாயிகள் மட்டும் காய்கறிகளை வைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 100 விவசாயிகள் மறுநாள் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் உழவர் சந்தைகளில் தற்போது கூட்டம் குறைந்துள்ளது. மேலும் சந்தைக்கு வருபவர்கள், விவசாயிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை கழுவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்கள் உழவர் சந்தைக்குள் அனுமதிக்கப்படவில்லை. முக கவசம் அணியாத விவசாயிகளின் கடை உரிமையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் கண்காணித்து மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த நடவடிக்கையால் வியாபாரம் பாதித்துள்ளதாகவும், காய்கறிகள் அழுகி வீணாவதால் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×