search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு- ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் ஏமாற்றம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 15-ந் தேதி வரை 12,846 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 11,889 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 2 நாட்களாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக இருந்த நிலையில் நேற்று 92 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

    63 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 776 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் தற்போது மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கடந்த 14-ந் தேதி முதல் தடுப்பூசி திருவிழாவாக கடைபிடிக்கப்பட்டு பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மற்றும் பழனியில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பழனி அருகே உள்ள பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தற்போது அங்கு மருந்துகள் இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் கடந்த சில தினங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதே போல செட்டியபட்டி, சீலப்பாடி போன்ற கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தினந்தோறும் 5,000 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் அதைவிட கூடுதல் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகின்றனர். இதனால் ஒரு சில மையங்களில் தட்டுப்பாடு உள்ளது. கூடுதல் மருந்துகள் வரவழைக்கப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போடும் நிலை உருவாக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×