search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களியக்காவிளை மார்க்கெட் ரோடு மூடப்பட்டிருப்பதை காணலாம்
    X
    களியக்காவிளை மார்க்கெட் ரோடு மூடப்பட்டிருப்பதை காணலாம்

    குமரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு- கேரள எல்லையில் 12 சாலைகள் மூடல்

    கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் பயணிகள் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று தெரிவித்த மாவட்ட கலெக்டர் அரவிந்த், கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் சாலைகளை மூட உத்தரவிட்டார்.
    களியக்காவிளை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெளிநாடுகள், வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களினால் தான் பாதிப்பு அதிகமாக அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

    கேரள மாநில எல்லையை ஒட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. இதனால் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு குமரி மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று ஆய்வு செய்தார்.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் பயணிகள் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று தெரிவித்த அவர், கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் சாலைகளை மூட உத்தரவிட்டார்.

    அதன்படி களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட குளப்புரம் கடுவாக்குழி சாலை, மார்க்கெட் சாலை, பனங்காலை சாலை, குளப்புரம் வன்னியகோடு சாலை, பளுகல் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மலையடி சாலை, தேவிகோடு ராமவர்மன் சிறை சாலை, உண்டன்கோடு சாலை, அருமனை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட புலியூர்சாலை, மாங்கோடு யமுனை தியேட்டர் சாலை, கொல்லங்கோடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கச்சேரி நடை, பாத்திமாபுரம், புன்னமூட்டுகடை ஆகிய சாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கேரளாவிலிருந்து வந்தவர்களை களியக்காவிளையில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய காட்சி.

    அந்த 12 சாலைகளும் இன்று மூடப்பட்டன. அந்த சாலைகள் வழியாக எந்த வாகனமும் சென்றுவர முடியாத வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும் அந்த சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    களியக்காவிளையில் அமைந்துள்ள மார்க்கெட் ரோடு, வன்னிகோடு, கடுவாக்குழி ஆகிய 3 சோதனை சாவடிகள் மூடப்பட்டன. மேலும் களியக்காவிளை சோதனை சாவடியில் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து வாகனத்தில் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் மற்றும் கொரோனா சோதனை செய்ததற்கான சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதனை வைத்திருப்பவர்கள் மட்டும் குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    மற்றவர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் மற்றும் ஆட்டோக்களில் இ-பாஸ் இல்லாமல் வந்த ஏராளமானோரை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் களியக்காவிளை பரபரப்புடன் காணப்பட்டது.

    Next Story
    ×