search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரம்
    X
    வாக்குப்பதிவு எந்திரம்

    வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92வது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்கு பதிவு

    வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
    சென்னை:

    வேளச்சேரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.கே.அசோக் மற்றும் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெ.எம்.எச்.அசன் மவுலானா, அ.ம.மு.க. சார்பில் எம்.சந்திரபோஸ், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் சந்தோஷ்பாபு, நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கீர்த்தனா உள்பட 23 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட வேளச்சேரி பஸ் நிலையம் அருகில் உள்ள 92-எம் என்ற வாக்குச்சாவடியில் கடந்த 6-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன், இங்குள்ள ஒரு வி.வி.பேட் எந்திரம் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு எந்திரத்தை இருசக்கர வாகனத்தில் முறைகேடாக கொண்டு சென்றதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிக்கு தேர்தல் ஆணையம் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்துகிறது. இதற்காக வேளச்சேரி, சீதாராமன் நகர் முதல் தெருவில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் உள்ள 92-எம் வாக்குச்சாவடியில் நேற்று மாலை 5.45 மணியளவில் தேர்தல் அலுவலர் வி.ஆர்.சுப்புலட்சுமி மற்றும் உதவி தேர்தல் அலுவலர் துளசிராம் ராஜ் ஆகியோர் வாக்குச்சாவடி அலுவலரிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒப்படைத்தனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தயாராக வைக்கப்பட்ட நிலையில் வாக்குச்சாவடி முழுவதும் துணை ராணுவ படை மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    முன்னதாக தேர்தல் பார்வையாளர் சர்மா மற்றும் தேர்தல் அதிகாரி கணேசன் ஆகியோர் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின், தேர்தல் பார்வையாளர் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று வேளச்சேரியில் உள்ள 92-எம் கொண்ட ஆண்களுக்கான வாக்குச்சாவடியில் நாளை (இன்று) காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இதில் வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 458 ஆண்கள் மட்டும் ஓட்டு போட வசதி செய்யப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், கட்சியின் சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளன.

    கோப்புப்படம்

    மறுவாக்குப்பதிவு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு தேர்தலை அமைதியான முறையில் நடத்த அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறியதாவது:

    வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடத்தும் வாக்குச்சாவடியில் கடந்த 6-ந் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது 458 ஓட்டுகள் உள்ள நிலையில் 220 ஓட்டுகள் மட்டும் பதிவானது. நாளை (இன்று) நடக்கும் வாக்குப்பதிவின் போது அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவாகும் என்று நினைக்கிறோம். இந்த தொகுதியில் 23 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர கூடுதலாக இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்களின் தொகுப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    வெப் கேமராக்கள் பொருத்தியதோடு துணை ராணுவத்தினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    வாக்காளர்களுக்கு ஏற்கனவே 6-ந் தேதி ஓட்டு போடும் போது இடது கை ஆள்காட்டி விரலில் கருப்பு மை வைக்கப்பட்டுள்ளது. தற்போது மறு வாக்குப்பதிவு என்பதால் வாக்காளர்களுக்கு இடது கையில் நடு விரலில் மை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
    Next Story
    ×