search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊருக்குள் புகுந்த யானைகள்
    X
    ஊருக்குள் புகுந்த யானைகள்

    அன்னூரில் இன்று காலை ஊருக்குள் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்

    வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று அதில் ஊற்றினால் பெரும்பாலும் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கலாம் என்றனர்.

    அன்னூர்:

    கோவை சிறுமுகை வனப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன.

    தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனத்தில் உள்ள விலங்குகள் குடிநீர் மற்றும் உணவு கிடைக்காமல் இறக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுத்தை மற்றும் 2 யானைகள் பலியானது.

    இந்நிலையில் நேற்று சிறுமுகை வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் குடிநீர் தேடி 6 யானை கூட்டம் வனத்தைவிட்டு வெளியேறியது. விடிய விடிய உணவு தேடிய யானை கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி நடந்தன.

    அதில் 2 யானைகள் வழிதவறி அன்னூர் அருகே உள்ள சாலையூர் என்ற ஊருக்குள் புகுந்தது. யானைகள் ஊருக்குள் நுழைந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சத்தம்போட்டும், பட்டாசு வெடித்தும் யானையை விரட்ட முயன்றனர். வழிதவறி வந்ததை உணர்ந்த யானைகள் பொதுமக்களின் மிரட்டலுக்கு ஆவேச மடைந்தன.

    பின்னர் கோபி ராசிபுரத்திற்கு வந்தது. அங்கும் மக்கள் தொடர்ந்து விரட்டினர். இதனால் அங்குள்ள சோளக்காட்டில் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த யானை அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாட்டின் வயிற்றில் தந்தத்தால் குத்தி கிழித்தது. இதில் பசுமாட்டின் வயிறு பிளந்து குடல் வெளியே சரிந்தது. பின்னர் பொம்மம்பாளையத்தில் மற்றொரு மாட்டை குத்தி கிழித்தது.

    இதனையடுத்து அந்த பகுதிமக்கள் இது குறித்து சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பட்டாசு வெடித்தும் சத்தம் எழுப்பியும் யானைகளை சிறுமுகை வனப்பகுதியை நோக்கி விரட்டினர். 2 யானைகளும் வெவ்வேறு திசைகளில் மாறி மாறி செல்வதால் ஒருங்கிணைத்து வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து போராடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, இந்த பகுதிக்கு இதுவரை யானைகள் வந்ததில்லை. ஒரு யானைக்கு நாள் ஒன்றுக்கு 150 கிலோ உணவும், 180 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று அதில் ஊற்றினால் பெரும்பாலும் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கலாம் என்றனர்.

    யானையால் தாக்கப்பட்டு குடல் சரிந்த 2 பசுமாடு குறித்து கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாடுகளை காப்பாற்ற போராடி வருகிறார்கள்.

    Next Story
    ×