search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    2-வது திருமணம் செய்து வைத்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - உருக்கமான தகவல்

    கொல்லிமலை அருகே 2-வது திருமணம் செய்து வைத்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள அய்யம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 40). இவர் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

    இந்த நிலையில் கடந்த 35 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (28) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    நேற்று விஜயலட்சுமி, தனது கணவர் உதயகுமார் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த நிலத்தில் குடும்பத்தினருடன் சென்று விவசாய பணிகளை மேற்கொண்டார்.

    மாலையில் பணி முடிந்ததும் விஜயலட்சுமி மற்றும் அவரது மாமனார், மாமியார், கணவர் அனைவரும் குளித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது விஜயலட்சுமி, விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் திடீரென குதித்தார். இந்த கிணறு சுமார் 70 அடி ஆழம் கொண்டது.

    சத்தம் கேட்டு மாமியார், மாமனார் ஓடிச்சென்று கிணற்றில் எட்டி பார்த்தனர். தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த விஜயலட்சுமி, சிறிது நேரத்திலேயே நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விஜயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் அவரது பெற்றோருக்கும் இது பற்றி தகவல் கொடுத்தனர்.

    விஜயலட்சுமி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உருக்கமான தகவல் கிடைத்தது.

    விஜயலட்சுமிக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தின்போது சீர்வரிசையாக பணம் மற்றும் நிறைய பாத்திரங்கள் விஜயலட்சுமியின் பெற்றோர் அவருக்கு கொடுத்துள்ளனர். இருப்பினும் விஜயலட்சுமியிடம் அவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அவரது நடத்தை சரியில்லை என்பதை அறிந்த விஜயலட்சுமி மனவேதனை அடைந்தார்.

    இதையடுத்து முதல் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கணவரிடம் இருந்து அவர் முறையாக விவாகரத்து பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல் திருமணத்தின்போது கொடுத்த பணம், பாத்திரங்கள் உள்ளிட்டவை திரும்ப கேட்டு போலீஸ் நிலையத்தில் வழக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இவற்றை திரும்ப கொடுக்க மறுத்துவிட்டனர். இதுவும் விஜயலட்சுமிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையே தங்களது மகள் வாழ்நாள் முழுவதும் இப்படி வீட்டில் இருந்தால் எப்படி? என எண்ணிய பெற்றோர், ஒரு புரோக்கர் மூலம் வரண் பார்த்து உதயகுமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இது விஜயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே முதல் திருமணம் செய்து, வாழ்க்கை சரியில்லாமல் போய் விட்டது. எனவே 2-வது திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் கூறியுள்ளார். உனது நலன் கருதி தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என எடுத்து கூறி 2-வது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து விஜயலட்சுமிக்கும்- உதயகுமாருக்கும் திருமணம் நடந்தது.

    இந்த திருமணம் பிடிக்காமலும், ஏற்கனவே முதல் கணவர் செய்த பிரச்சினையாலும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×