search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிராம்பட்டினத்தில் கன மழையால் உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்திருக்கும் காட்சி
    X
    அதிராம்பட்டினத்தில் கன மழையால் உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்திருக்கும் காட்சி

    அதிராம்பட்டினத்தில் கனமழையால் உப்பளங்கள் பாதிப்பு

    மழையால் உப்பளங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் இன்று காலை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    அதிராம்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான உப்பளங்கள் உள்ளன.

    கோடை காலங்களில் இங்கு உப்பு உற்பத்தி மும்முரமாக நடைபெறும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உப்பு உற்பத்தி தொழிலில் நேரடியாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் அவ்வப்போது பெய்யும் கோடை மழையால் உப்பு பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது குறைந்த ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே சிலர் உற்பத்தி தொழிலிலை வேறு வழியின்றி செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பாத்தி கட்டி வைத்திருந்த உப்பளங்களில் நேற்று காலையில்தான் உப்பு வாரும் பணி நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தொடர்ந்து கோடை வெயில் சுட்டெரித்ததால் உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    ஆனால் நேற்று இரவு இப்பகுதியில் பெய்த திடீர் கனமழையால் மழைநீர் உப்பளங்களில் தேங்கியது. இதனால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியது. உப்பு வாரும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    இந்த திடீர் மழையால் பணிகள் பாதிக்கப்பட்டதால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் பணியை தொடர்வதா, வேண்டாமா என்ற நிலையில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

    கோடை மழையால் இந்த ஆண்டும் உப்பு உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    மழையால் உப்பளங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் இன்று காலை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


    Next Story
    ×