search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    பொள்ளாச்சி அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி

    பொள்ளாச்சி அருகே விறகு சேகரிக்க சென்ற பெண் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி:

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனசரகம், டாப்சிலிப் வனப்பகுதியில் எருமைபாறை, பூமாட்டி, வரகளியாறு என பல்வேறு மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    பூமாட்டி பகுதியை சேர்ந்தவர் பரமன். இவரது மனைவி வனத்தாய்(வயது55). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரமன் இறந்து விட்டார். இதையடுத்து வனத்தாய் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று மாலை வீட்டிற்கு தேவையான விறகுகள் சேகரிக்க பூமாட்டி பகுதியில் இருந்து வரகளியாறு வனப்பகுதிக்கு சென்றார்.

    அங்கு விறகு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு புதர்மறைவில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென இவரை விரட்ட தொடங்கியது. இதனால் அச்சம் அடைந்த வனத்தாய் யானையிடம் தப்பித்து ஓட முயற்சித்தார்.

    ஆனால் அதற்குள்ளாகவே யானை அவரை துதிக்கையால் தூக்கி கீழே வீசி காலால் மிதித்து கொன்றது. இதில் வனத்தாய் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் விறகு சேகரிக்க சென்ற தாய் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பிள்ளைகள் காட்டிற்கு சென்று தேடினர். அப்போது அங்கு வனத்தாய் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர், உலாந்தி வனசரக அலுவலர் நவீன்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் வனத்தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன் புதூரில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே யானை தாக்கி உயிரிழந்த வனத்தாயின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.

    விறகு சேகரிக்க சென்ற பெண் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×