search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு குறைவு ஏன்?- சுகாதார பணிகள் துணை இயக்குனர் விளக்கம்

    கடந்த ஆண்டு பரவலின்போதும், தற்போதைய இரண்டாவது அலையிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவின் தாக்கம் மிக மிக குறைவாக காணப்படுகிறது.

    பெரம்பலூர்:

    இந்தியாவில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் 2-வது அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆயிரத்தை எட்டிய தினசரி பாதிப்பு இன்று 8 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு பரவலின்போதும், தற்போதைய இரண்டாவது அலையிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவின் தாக்கம் மிக மிக குறைவாக காணப்படுகிறது.

    இந்த மாவட்டத்தில் இதுவரை 34 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவின் தாக்கம் குறைவாக இருப்பது குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கீதாராணி கூறியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்கும் பணியில் இரவு பகலாக சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவு. இதனால் வசிப்பிடங்களுக்கிடையே அதிக இடைவெளி ஆகியவையும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம்.

    இந்த மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.எப். தொழிற்சாலையில் வெளி மாநில, வெளி மாவட்டத்தினர் அதிகம் பணிபுரிவதால் அங்கு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் சுகாதார குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோப்புப்படம்

    தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தியும், பொதுமக்களிடையே தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தியும் வருகிறோம்.

    இது தவிர மாவட்டத்தை சேர்ந்த சிலர் பிழைப்புக்காக சென்னை, திருப்பூர், கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். கடந்த முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு வெளி மாவட்டத்திலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் தான் இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது.

    அதே போல வெளியூர்களுக்கு பிழைப்புக்காக சென்றவர்கள் பெரம்பலூருக்கு திரும்பினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை இம்மாவட்டத்தில் அதிகரிக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளோம்.

    பெரம்பலூரில் நீதிபதி, வக்கீல்கள் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வழக்காடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நீதிமன்ற வளாகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது என்றார்.

    Next Story
    ×