search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி : மேலும் 160 பேருக்கு கொரோனா

    திருப்பூர் மாவட்டத்தில் தினமும் 5 ஆயிரம் பேருக்குகொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுபோல் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 803-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 340-ஆக உள்ளது.

    மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,233 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 230-ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் நாள் ஒன்றின் பாதிப்பு 200-ஐ நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி நாள் ஒன்றிற்கு திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    பாதிப்பு அதிகரித்துள்ளதால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி நாள் ஒன்றிற்கு 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×