search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடமாற்றம்
    X
    இடமாற்றம்

    இரவு ரோந்தில் அத்துமீறல்: பாதி பூட்டிய ஓட்டலுக்குள் அமர்ந்து சாப்பிட்ட பெண்கள் மீது தாக்குதல்- சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓட்டலுக்குள் புகுந்து தாக்கும் சம்பவம் இன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் என்பதால் ஓட்டல்கள் அனைத்தையும் 11 மணியளவில் மூட அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இந்த ஓட்டல் நேற்று வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்தது. இரவு 10 மணியளவில் கடைக்கு வந்த போலீஸ்காரர்கள் கொரோனா காலம் என்பதால் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை மூடுங்கள் என்று கூறி சென்றனர்.

    11 மணி வரை நேரம் இருக்கிறது என்பதால் கடை உரிமையாளர் கடையின் பாதி ‌ஷட்டரை அடைத்து கொண்டு வியாபாரத்தை தொடர்ந்தார். சிலர் வந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் ஓசூரை சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் சாப்பிடுவதற்காக அங்கு ஏதாவது கடை உள்ளதா? என தேடி பார்த்தனர். ஆனால் அனைத்து கடையும் பூட்டியே கிடந்தது.

    சிறிது தூரம் தள்ளி பாதி ‌ஷட்டர் மூடிய நிலையில் செயல்பட்ட ஓட்டலை அவர்கள் கண்டனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் அங்கு சென்று, ஊழியர்களிடம் நாங்கள் ஊருக்கு செல்ல உள்ளோம். பசி அதிகமாக இருப்பதால் சாப்பாடு கிடைக்குமா ? என கேட்டனர். ஓட்டல் ஊழியர்கள் அவர்கள், 5 பேரையும் உள்ளே அழைத்தனர். பின்னர் அவர்கள் உள்ளே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். இவர்கள் தவிர சிலரும் அங்கே சாப்பிட்டனர்.

    இந்த நிலையில் பஸ்நிலையத்தில் ரோந்து பணி மேற்கொண்ட காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கடையின் ‌ஷட்டர் பாதி திறந்து இருப்பதை கண்டதும் கடையை நோக்கி வந்தார்.

    அப்போது கடைக்குள் பெண்கள் உள்பட 8-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். கடையின் உள்ளே நுழைந்த சப்-இன்ஸ்பெக்டர் அங்கு இருந்தவர்களிடம் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கடையை மூட உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் நீங்கள் கடையை மூடாமல் பாதி திறந்து வியாபாரம் செய்கிறீர்களா? என கூறி அங்கிருந்த ஊழியர்களை லத்தியால் தாக்கினார். மேலும் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த ஆண்களையும் லத்தியால் தாக்கி வெளியில் விரட்டினார். அப்போது அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த பெண்கள் மீது லத்திபட்டது. இதில் கடை ஊழியர்கள், பெண் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். பின்னர் வெளியில் வந்த போலீஸ்காரர் அங்கு சுற்றிதிரிந்த சிலரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அனைத்துமே அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதற்கிடையே காயம் அடைந்தவர்கள் போலீசாரின் இந்த செயல் குறித்து கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் கொடுத்தனர். அவர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் போலீஸ்காரர் சாப்பிட்டவர்களை தாக்கியது உண்மை என்பது தெரிந்ததும் அவரை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    அரசு விதித்த நெறிகாட்டு முறைகளிலேயே 11 மணி வரை கடை நடத்தி கொள்ளலாம் என அனுமதிக்கும் போது, இங்கு 10 மணிக்கே கடையை அடைக்க சொல்வது மட்டுமில்லாமல், அடைக்காதவர்களை தாக்கும் சம்பவம் நடந்துள்ளது வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓட்டலுக்குள் புகுந்து தாக்கும் சம்பவம் இன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. * * * சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் காயமடைந்தவர்களை படத்தில் காணலாம்.

    Next Story
    ×