search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா உணவகம்
    X
    அம்மா உணவகம்

    கொரோனா காலத்திலும் ஓய்வு இல்லை- அட்சய பாத்திரங்களாக மாறிய அம்மா உணவகங்கள்

    சென்னையில் மட்டும் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள், படிப்படியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் செயல்பட தொடங்கியது. மாநிலம் முழுவதும் சுமார் 700 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
    சென்னை:

    ‘அம்மா உணவகம்’....

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா உணவகம் தொடர்ந்து 8 ஆண்டுகளாக ஏழைகள் மற்றும் கூலித் தொழிலாளிகளின் பசியை போக்கி வருகிறது.

    அந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி 15 இடங்களில் ஜெயலலிதா, அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் பலர் அம்மா உணவகத்தை கேலி பேசினார்கள். மலிவு விலையில் வழங்கப்படும் உணவு எப்படி இருக்கும் என்று தெரியாதா? என்று கேள்வி எழுப்பினர்.

    ஜெயலலிதா

    பின்னர் அதுபோன்று பேசியவர்களே அம்மா உணவகத்திற்கு சென்று சாப்பிடும் நிலை ஏற்பட்டது.

    1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம், சப்பாத்தி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னையில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் பலருக்கு தினசரி சாப்பாடு அம்மா உணவகங்களில்தான்.

    அதே நேரத்தில் அவசரம் அவசரமாக பள்ளிக்கூடங்களுக்கு சென்ற தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பலர் அம்மா உணவகத்தில் இட்லி வாங்கி கொடுத்து அனுப்பியதும் உண்டு.

    இப்படி ஏழைகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் மட்டுமே பசியாற்றுவதற்கு சென்று வந்த அம்மா உணவகத்தின் அருமை கடந்த ஆண்டு கொரோனா காலத்தில்தான் பலருக்கு தெரிந்தது.

    கொரோனா ஊரடங்கால் அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்ட நிலையில் அம்மா உணவகங்கள் மட்டுமே அப்போது பலருக்கு கைகொடுத்தது.

    ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி பலரும் அம்மா உணவகத்துக்கு சென்று சாப்பிடும் நிலையை கடந்த ஆண்டு கொரோனா ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு வார்டுக்கு 2 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    200 வார்டுகளிலும் 400 அம்மா உணவகங்கள் 3 வேளையும் பசியாற்றி வருகிறது. கொரோனா காலத்தில் அம்மா உணவக ஊழியர்கள் பலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. இதுபோன்ற நேரங்களில் வைரஸ் தொற்று ஏற்பட்ட உணவகங்கள் மட்டுமே சில நாட்கள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது.

    கொரோனா காலத்தில் பொதுமக்கள் பணமின்றி திண்டாடியபோது இலவச உணவகமாகவும் அம்மா உணவகங்கள் மாறி இருந்தன. பலர் அம்மா உணவகங்களில் உணவு அளிக்க முன் வந்தனர்.

    அவர்கள் மூலமாகவும் தினமும் உணவு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் முழுமையாக மூடப்படாமல் செயல்பட்ட ஒரே உணவகம், ‘அம்மா உணவகம்’ என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு ‘அட்சய பாத்திர’மாகவே மாறி மக்களின் பசியை அம்மா உணவகங்கள் போக்கின.

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி உள்பட 7 மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் பசியையும் போக்கி வருகிறது.

    சென்னையில் மட்டும் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள், படிப்படியாக தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் செயல்பட தொடங்கியது. மாநிலம் முழுவதும் சுமார் 700 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சராசரியாக இந்த உணவகங்களில் 12 லட்சம் பேர் சாப்பிட்டு வருவதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

    சென்னையில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் தினமும் பசியாறி வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து இருந்தது. சுமார் 5 லட்சம் பேர் வரையில் அம்மா உணவகங்களுக்கு சென்று அப்போது சாப்பிட்டனர்.

    தற்போது கடந்த ஆண்டை போலவே கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஓட்டல்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைகள் மட்டுமே செயல்பட வேண்டும் என்கிற அரசின் உத்தரவு அம்மா உணவகங்களுக்கும் பொருந்தும் என்பதால் அங்கும் சமூக இடைவெளியை கடைபிடித்து 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா பரவல் அதிகரித்து கடந்த ஆண்டை போல ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால், அப்போதும் நிச்சயம் அம்மா உணவகங்கள் திறந்து இருக்கும். எப்போதும் போல மக்களின் பசியை போக்குவதில் அம்மா உணவகங்கள், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரங்களாகவே திகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
    Next Story
    ×