search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    மீனவர் நிவாரண தொகையை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் - கே.எஸ்.அழகிரி கோரிக்கை

    ஆந்திராவில் மீனவர் நிவாரணத்தொகை ரூபாய் 4 ஆயிரமாக இருந்ததை, தற்போது ரூ.10 ஆயிரமாக வழங்கப்பட்டுள்ளதாக கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983 விதிகளின்படி ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது.

    குறிப்பாக, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் துவங்கி, கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் வரை உள்ள மீனவ கிராமங்களில் இருந்து படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

    மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு மீன்பிடித்தடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கொரோனா தொற்று காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதைத் தொடர்ந்து மீன்பிடித்தடை காலத்திலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 135 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனை கருத்தில் கொண்டு நடப்பு 2021-ம் ஆண்டு மீன்பிடித் தடை காலத்தை 61 நாட்களிலிருந்து 45 நாட்களாக குறைத்து அறிவிக்க வேண்டும்.

    இந்த மீன்பிடித் தடைகாலம் பொருத்தமற்ற நேரத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை என்பதற்கு பதிலாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை என மாற்றியமைக்க வேண்டும்.

    கோப்புபடம்

    இதன்படி, இனவிருத்தி நடைபெறும் நேரத்தில் மீனவர்களை அனுமதித்துவிட்டு, மீன்வகைகள் இனவிருத்தி நடைபெறாத நேரத்தில் மீனவர்களை மீன்பிடிக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. எனவே, அறிவியலுக்கு அப்பாற்பட்டு மீனவர்களுக்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் எந்த விதத்திலும் பயன் தராத, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான தடையை உடனடியாக திருத்தியமைக்க வேண்டும்.

    அதேபோல, மீனவர்களுக்கு மீன் பிடித்தடைகால நிவாரணமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் 5 ஆயிரத்தை ரூபாய் 7500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

    அண்டை மாநிலமான ஆந்திராவில் நிவாரணத்தொகை ரூபாய் 4 ஆயிரமாக இருந்ததை, தற்போது ரூ.10 ஆயிரமாக வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விசைப்படகுகளை பராமரிக்க அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். மேலும் மீன்பிடித் தடை காலத்தை மாற்றியமைக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×