search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    கொரோனா பாதிப்பு எதிரொலி- வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி பாதியாக சரிந்தது

    சத்துணவுக்கு அனுப்ப வேண்டிய முட்டைகளும் நாள் ஒன்று 5 லட்சம் வரை தேக்கம் அடைந்தன. அவற்றை விலை குறைவாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் 4 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த முட்டைகள் கேரளாவுக்கு 90 லட்சம், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு 50 லட்சம், வெளிநாடுகளுக்கு 40 லட்சம் என அனுப்பப்பட்டு வந்தன. இதர முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தன.

    கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக முட்டை விலை ஒரு ரூபாய்க்கு குறைவாக விற்றது. தொடர் நஷ்டத்தால் குஞ்சுகளை விடுதல் குறைந்து போனது. பண்ணையில் தேங்கிய முட்டைகளை சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணையாளர்களே கிராமம், கிராமமாக சென்று விற்பனை செய்த சம்பவங்களும் நிகழ்ந்தன.

    சத்துணவுக்கு அனுப்ப வேண்டிய முட்டைகளும் நாள் ஒன்று 5 லட்சம் வரை தேக்கம் அடைந்தன. அவற்றை விலை குறைவாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தனர்.

    தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனால் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்த முட்டை ஏற்றுமதி படிப்படியாக முன்னேறி பழைய நிலையை அடைந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மண்டலத்தில் கூடுதலான கோழி குஞ்சுகள் விடப்பட்டன. அவை தற்போது முட்டையிடும் பருவத்துக்கு வந்து முட்டையிடுகின்றன. முட்டைகள் பண்ணைகளில் தேக்கமின்றி தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறன.

    தற்போது கொரோனா 2-ம் அலை வீசுவதால் கடந்த வருடம் ஏற்பட்ட ஏற்றுமதி சரிவை போல் மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் முட்டையின் அளவு நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது. இதனால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    இது பற்றி பண்ணையாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    கடந்த வருடம் கொரோனா காலத்தில் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. கோழி தீவின வரத்து தடை, வெளிநாடு, வெளிமாநிலங்களில் முட்டை விற்க முடியாத நிலை போன்றவைகளால் கோழிப்பண்ணை தொழில் முற்றிலுமாக முடங்கியது. பின்னர் கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து படிபடிப்படியாக சகஜ நிலைக்கு கோழிப்பண்ணை தொழில் திருப்பியது.

    இந்த நிலையில் கொரோனா மீண்டும் பரவ தொடங்கி உள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துபாய், ரோமன், பக்ரைன், கத்தார் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மாதந்தோறும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து 2 கோடியே 92 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா, முட்டை விலை உயர்வு போன்றவைகள் காரணமாக தற்போது ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளன. இதன் காரணமாக மாதம் 1 கோடி முட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இவ்வாறு கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    முட்டை ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் மானியம் வழங்க வேண்டும் எனவும், வெளி மாநிலங்களில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்படும் போது அனைத்து பகுதிகளில் இருந்தும் முட்டை ஏற்றுமதி தடைபடுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×