search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்: 52 மெட்ரோ ரெயில்களில் 10 குழுக்கள் அதிரடி வேட்டை

    அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்புகள் இன்று முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் மெட்ரோ ரெயில்களில் முகக்கவசம் இன்றி பயணம் செய்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. இது இன்று உடனடியாக அமல் படுத்தப்பட்டது .

    சென்னையில் அனைத்து மெட்ரோ ரெயில் வழித் தடங்களிலும் முகக்கவசம் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு குழுக்கள் களம் இறங்கி உள்ளன.

    சென்னையில் மெட்ரோ வழித்தடங்களில் 52 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் அனைத்திலும் 10 சிறப்பு குழுக்களை சேர்ந்தவர்கள் இன்று அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலைய நுழைவு வாயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், மாஸ்க் அணியாத பயணிகளை ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லை. முகக்கவசம் இன்றி வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    ரெயில் நிலையத்துக்குள் முகக்கவசத்தோடு வரும் பயணிகள் ரெயில் பயணத்தின்போதும் முகக் கவசம் அணிந்துள்ளார்களா? என்பதையும் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் கண்காணித்தனர்.

    அனைத்து ரெயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த கேமிராக்கள் மூலமாக முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

    இதுபோன்று முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு சிறப்பு குழுக்களை சேர்ந்தவர்கள் ரெயில் பெட்டிக்குள் அதிரடியாக புகுந்து ரூ.200 அபராதம் விதிக்கும் பணியை தொடங்கினர்.

    அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்புகள் இன்று முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது.

    இது தொடர்பாக மெட்ரோ நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    முகக்கவசம்

    மெட்ரோ ரெயில் பயணம் குளிர்சாதன வசதி கொண்டது என்பதால், பயணிகள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதனை மீறி முகக்கவசம் அணியாமலும், ரெயில் பயணத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பயணம் செய்பவர்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இந்த எச்சரிக்கையால் இன்று பெரும்பாலான பயணிகள் முகக்கவசம் அணிந்தே மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு சென்றனர். இதுபோன்று சென்றவர்களில் ரெயில் பயணத்தின்போது வெகு சிலரே முகக்கவசம் அணியாமல் பயணித்தனர்.அவர்களிடம் மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இது தவிர அனைத்து பயணிகளுக்கும் மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்துக்குள் உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது.

    இதுபோன்ற கொரோனா கட்டுப்பாடுகளால் இன்று மெட்ரோ ரெயில்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    Next Story
    ×