search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா- சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்

    இந்தியாவில் 2-வது அலை கொரோனா வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகிறது. இந்த லாரிகள் மூலம் வடமாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, தானிய வகைகள், மசாலா பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை உள்பட பல்வேறு பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    இது போல தமிழகத்தில் இருந்து மஞ்சள், ஜவ்வரிசி மாவு, கோழி தீவனம், உரம், ஜவுளி வகைகள் உட்பட பல்வேறு பொருட்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. லாரி போக்குவரத்து மூலம் தினசரி கோடிக்கணக்கில் அரசுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கெரோனாவால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் கடந்த அக்டோபர் முதல் லாரி தொழில் சற்று வேகம் எடுத்தது. பல மாதங்களாக வருவாய் இல்லாமல் இருந்த லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் சற்று அதிகரித்தது.

    இந்தநிலையில் இந்தியா முழுவதும் 2-வது அலையாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தினால் சொந்த ஊருக்கு செல்ல முடியாது என்ற எண்ணத்தில் அவரவர் ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இதனால் தொழிற் சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்கவில்லை. ஏற்கனவே டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் சுங்க கட்டணம் உயர்வால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.

    இனி வரும் நாட்களில் ஊரடங்கு கடுமையாகும் போது தொழில் பாதிக்கும் என்பதால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் ஆய்வு செய்து தவித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் ஓடுகிறது. லாரி தொழிலை நம்பி தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களில் 20 முதல் 30 சதவீத வடமாநில தொழிலாளர்கள். இவர்கள் பெரும்பாலும் லோடு ஏற்றி, இறக்குவது, கிளீனர் மற்றும் மெக்கானிக்காக உள்ளனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனாவில் இருந்து மீண்டு கடந்த 6 மாதமாக தான் 50 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

    இந்தியாவில் 2-வது அலை கொரோனா வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா பயத்தால் வடமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

    இதனால் தொழிற் சாலைகளில் உற்பத்தி குறைந்து லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்கவில்லை. தற்போது வடமாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்கள் லோடு வருகிறது. அவையும் இன்னும் ஒரு மாதத்திற்கு வரும்.ஆனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவ்வரிசி மாவு, மஞ்சள் லோடுகள் கிடைக்கவில்லை. 50 சதவீத லாரிகளுக்கு தற்போது லோடு கிடைக்காமல் உள்ளது. லோடு கிடைக்காததால் லாரி தொழிலை நம்பியுள்ள பல ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு ஏதாவது உதவி செய்து லாரி தொழிலை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×