search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க வீடு, வீடாக சென்று பொதுமக்களை கண்காணிக்க ஏற்பாடு

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிற நிலையில் இன்னும் இம்முகாம்களை அதிகப்படுத்தவும் சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதுபற்றி சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், பொதுமக்கள் வீட்டில் இருக்கும்போதும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பு, சானிடைசர் திரவத்தால் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். முக்கியமாக சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையை தவிர தேவையில்லாமல் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம்.

    நமது மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் தினந்தோறும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வருகிற புதன்கிழமை முதல் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். அவ்வாறு நடைபெறும் முகாம்களில் அங்கேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுவதோடு கொரோனா தடுப்பூசியும் போடப்படும்.

    அதுமட்டுமின்றி வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தினந்தோறும் கண்காணிக்கும் பணியில் 500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களை தனித்தனி குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிலும் 2 செவிலியர்கள், 2 ஊழியர்கள் என 4 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அனைத்து வீடுகளுக்கும் சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை கண்காணித்து உரிய ஆலோசனை வழங்கவும், நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யும் பணியையும் மேற்கொள்ள உள்ளனர். இதுதவிர அங்கன்வாடி ஊழியர்கள் 220 பேரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் அவ்வப்போது சானிடைசர் திரவத்தை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும், வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதேநேரத்தில் முக கவசம் அணிந்து வராத பொதுமக்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் கடைகளில் பொருட்களை வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமின்றி தேவைப்பட்டால் கடையையும் பூட்டி சீல் வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×