search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான கண்ணன், சந்திரசேகர், முத்து மனோ
    X
    கைதான கண்ணன், சந்திரசேகர், முத்து மனோ

    களக்காடு அருகே பிளஸ்-2 மாணவரை கொல்ல முயன்ற கூலிப்படையினர் 4 பேர் அதிரடி கைது

    களக்காடு அருகே காதல் விவகாரத்தில் பிளஸ்-2 மாணவரை கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பொத்தையடி காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் பதுங்கி இருப்பதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 4 மர்மநபர்கள், போலீசாரை கண்டதும் இருளில் தப்பியோட முயன்றனர். எனினும் அவர்களை போலீசார் விரட்டிச்சென்று அதிரடியாக மடக்கி பிடித்தனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், களக்காடு அருகே பெத்தானியா சர்ச் தெருவைச் சேர்ந்த சாது சுந்தர்சிங் மகன் அருள் துரைசிங் என்ற கண்ணன் (வயது 23), விஜயநாராயணம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் சந்திரசேகர் (22), முருகேசன் மகன் மாதவன் (19), மூன்றடைப்பு வாகைக்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த பாபநாசம் மகன் முத்து மனோ (27) என்பதும், அவர்கள் கூலிப்படையாக செயல்பட்டதும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் காதல் விவகாரத்தில் பிளஸ்-2 மாணவர் ஒருவரை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த பரபரப்பு தகவலும் வெளியானது.

    அதாவது, பணகுடி பகுதியைச் சேர்ந்த 18 வயதான பிளஸ்-2 மாணவர், களக்காடு அருகே பொத்தையடியைச் சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவியை காதலித்தார். இவர்களது காதலுக்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மாணவர் நேற்று முன்தினம் இரவு தனது காதலியை பார்ப்பதற்கு பொத்தையடிக்கு வரும்போது, அவரை தீர்த்துக்கட்டுவதற்காக, கூலிப்படையைச் சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் நாட்டு வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 அரிவாள்கள், 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    காதல் விவகாரத்தில் மாணவரை கொல்ல முயன்ற கூலிப்படையினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×