search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்
    X
    கோயம்பேடு மார்க்கெட்

    கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்துக்கு இன்று ஒருநாள் மட்டும் அனுமதி

    சில்லரை வியாபாரிகள் தங்களின் தர்ணா போராட்டத்தை இன்று தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். அதன்பிறகு இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தற்போது பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

    தமிழக அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகளில் கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பும் ஒன்று. இதற்கு கோயம்பேட்டில் உள்ள சில்லரை கடை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறிய வியாபாரிகள் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டிற்கு எதிரே இருக்கும் அரசின் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கோயம்பேடு வணிக வளாக நிர்வாக முதன்மை இயக்குனர் கோவிந்தராஜன் மற்றும் சிறு, குறு மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் நேற்று சி.எம்.டி.ஏ. நிர்வாக செயலாளர் கார்த்திகேயனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    இன்று (சனிக்கிழமை) மட்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் வியாபாரம் செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த கட்டமாக நாளை மறுநாள் (திங்கள்கிழமை) அரசு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டது.

    இதையடுத்து சில்லரை வியாபாரிகள் தங்களின் தர்ணா போராட்டத்தை இன்று தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். அதன்பிறகு இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.

    திங்கள்கிழமை பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை கடைகள் தொடர்ந்து செயல்பட என்னென்ன கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க முடியும் என்று சென்னை தலைமைச் செயலாளரிடம் இருந்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளிடம் கேட்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சில்லரை கடைகளை எவ்வாறு செயல்பட ஏற்பாடு செய்யலாம் என்பது தொடர்பான அறிக்கை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற திங்கள் கிழமை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படுகிறது.

    இது தொடர்பாக கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டில் 1800 சில்லரை காய்கறி கடைகளும், 720 சில்லரை பழக்கடைகளும் என மொத்தம் 2520 சிறுகடைகள் உள்ளன. சில்லரை கடைகள் செயல்பட தடை விதித்து 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானதை அடுத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கோயம்பேடு வணிக வளாகத்தில சில்லரை கடைகளை எப்படி செயல்படுத்துவது என்பது தொடர்பாக அங்காடி நிர்வாக குழுவிடம் இருந்து தலைமை செயலாளர் அறிக்கை கேட்டு இருந்தார். அதன்படி ஒரு கடை விட்டு ஒரு கடையை தினமும் சுழற்சி முறையில் திறப்பது என்றும், அதன் மூலம் 50 சதவீத கடைகளை செயல்பட அனுமதிக்கலாம் என்றும் கூறியுள்ளோம்.

    மேலும் கூடுதலாக பணியாளர்கள் போட்டு கண் காணிப்பை தீவிரப் படுத்துவது என்றும், கோயம்பேடு மார்க் கெட்டிற்கு வருபவர்களுக்கு நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை செய்வது, சானிடைசர் வழங்குவது என்றும் முடிவு செய்துள் ளோம்.

    மற்றொரு திட்டமாக நள்ளிரவு 12 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து சில்லரை கடைகளையும் செயல்பட அனுமதிக்கலாம். இதன் மூலம் பொதுமக்கள் அங்கு வருவதை கட்டுப்படுத் திவிடலாம் என்ற தகவலையும் அறிக்கையில் கொடுத்துள்ளோம்.

    நாங்கள் கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் திங்கள் கிழமை பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்புகிறோம். தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை அங்காடி நிர்வாக குழு ஏற்கும். ஆனால் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு விடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகள் இயங்குவதற்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் 60 சதவீத சில்லரை கடைகளை வாடகைக்கு எடுத்துதான் நடத்துகிறோம். ஒரு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே வியாபாரம் செய்தால் வாடகை எப்படி கொடுக்க முடியும்? குடும்ப செலவுகளை எப்படி சமாளிக்க முடியும்? எனவே கடும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் 100 சதவீத கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×