search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடை செய்யப்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புகள்.
    X
    தடை செய்யப்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புகள்.

    தஞ்சை மாவட்டத்தில் வேகமெடுக்கும் கொரோனா: தொடர்ந்து 2 வாரமாக 100-ஐ தாண்டும்

    கும்பகோணம் நகராட்சி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறையாமல் 2-வது அலை வீசுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது 2 மாதமாக மீண்டும் வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு கடந்த 2 வாரமாக 100-ஐ தாண்டி உள்ளது.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 867-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19 ஆயிரத்து 712 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 874 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு மாவட்டத்தில் இதுவரை 281 பேர் இறந்துள்ளனர்.

    மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா கட்டுக்குள் வராமல் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் கும்பகோணம் ஜெ.பி.கோவில் தெருவில்1 வாரத்தில் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேப்போல் காசி விஸ்வநாதர் கோவில் தெருவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே இந்த 2 பகுதிகளையும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கொரோனா வேகம் அதிகரிப்பால் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி கும்பகோணம் நகராட்சி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு கொண்டனர். அதேப்போல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், 2ம் கட்ட தடுப்பூசி போட்டு கொள்ளவும் ஏராளமானோர் வந்ததால் மருத்துவமனை நிரம்பி வழிந்தது. ஆனால் மருத்துவமனையில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காத்திருந்து பரிசோதனை செய்து கொண்டனர்.

    தினமும் பொதுமக்கள் அதிகளவில் மருத்துவமனைக்கு வருவதால் நகராட்சி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதேப்போல் மாவட்டத்தில் மற்ற அரசு மருத்துவமனைகளில் பணியாளர்கள் தட்டுப்பாடு இருப்பின் அதனையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா வேகமெடுப்பதால் மீண்டும் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் பரிசோதனை நடந்து வருகிறது. இதில் யாருக்காவது மேற்கூறிய அறிகுறி இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதேப்போல் அரசு மருத்துவமனை, நடமாடும் பரிசோதனை வாகனத்தில் தினமும் குறைந்தது 2000 பேருக்காவது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேப்போல் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    Next Story
    ×