search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குமரியில் ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா- தி.மு.க. எம்.எல்.ஏ. மகனுக்கு தொற்று

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். வீடுகளிலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. 2 வாரத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக நாகர்கோவில் நகரில் பாதிப்பு அதிகமாக இருந்தது. 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரத்தில் இல்லாத அளவில் நேற்று கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நாகர்கோவில் நகரில் மட்டும் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் ஆவார்கள்.

    அகஸ்தீஸ்வரம் யூனியனில் 11 பேரும், கிள்ளியூரில் 3 பேரும், குருந்தன்கோட்டில் 5 பேரும், மேல்புறத்தில் 4 பேரும், ராஜாக்கமங்கலத்தில் 11 பேரும், திருவட்டாரில் 4 பேரும், தோவாளையில் 7 பேரும், தக்கலையில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லையில் இருந்து நாகர்கோவில் வந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். வீடுகளிலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நாகர்கோவில் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகனும் சுரேஷ்ராஜனுக்கு ஆதரவு திரட்டினார். தேர்தல் முடிந்ததையடுத்து சுரேஷ் ராஜனின் மகன் சென்னையில் உள்ள நண்பரை பார்க்க சென்றார்.

    அங்கு அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததையடுத்து கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து நாகர்கோவிலுக்கு வந்த அவர், தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர் ஒருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 1,322 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக 291 பேர் கொரோனா தடுப்பூசி போட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 58,194 பேர் முதல் கட்ட தடுப்பூசியும், 7,539 பேர் 2-ம் கட்ட தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

    கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் சுகாதார பணியாளர்கள் இன்று 2-வது நாளாக வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்தினார்கள்.

    காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்தவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×