search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில்லரை வியாபாரிகளை படத்தில் காணலாம்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில்லரை வியாபாரிகளை படத்தில் காணலாம்.

    கடைகளை மூட எதிர்ப்பு- கோயம்பேடு சில்லரை வியாபாரிகள் போராட்டம்

    கோயம்பேடு மார்க்கெட்டில் 1,600 சிறு காய்கறி கடைகளும், 850 பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
    போரூர்:

    கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோயம்பேடு காய்கறி, பழம் மார்க்கெட் மூடப்பட்டது. மீண்டும் அக்டோபர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது.

    இந்த நிலையில் சென்னையில் கொரோனா நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு மார்கெட்டில் செயல்பட்டு வரும் சிறு மொத்த காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் 1,600 சிறு காய்கறி கடைகளும், 850 பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 10 ஆயிரம் ஊழியர்கள், தொழிலாளர்கள் இந்த தொழிலை சார்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடைகளை மூடுவதற்கு சிறு வியபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில்லரை வியாபாரிகளை படத்தில் காணலாம்.

    சிறு வியாபார கடைகளை மூடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வியாபாரிகள் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சி.எம்.டி.ஏ. அதிகாரி அழைப்பு விடுத்தார். அதனை அவர்கள் ஏற்க மறுத்தனர். மார்க்கெட்டுக்கு அதிகாரி வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இது குறித்து சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:-

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி வியாபாரம் செய்து வருகிறோம்.

    எங்களை கலந்து ஆலோசிக்காமல் திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. விற்பனை நேரத்தை குறைத்து 50 சதவீத கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். அல்லது சுழற்சி முறையில் வியாபாரத்துக்கு அனுமதி தர வேண்டும். முழுமையாக கடைகளை மூடுவது என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×