search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நெல்லை பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உள்பட மேலும் 66 பேருக்கு கொரோனா

    நெல்லை பேட்டையில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து 8 தெருக்களுக்கு ‘சீல்’ வைத்து சுகாதாரதுறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று 806 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதில் 66 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர தூத்துக்குடியை சேர்ந்த ஆண் டாக்டர் ஒருவருக்கும், பெண் டாக்டர் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆண் டாக்டர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர். தற்போது மீண்டும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பேட்டை செந்தமிழ் நகரில் 5 வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் இந்த வீட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.

    இதைத்தொடர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதில் இன்று மேலும் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதேபோல தியாகராஜ நகரில் தாய்- 6 வயது மகனுக்கும், நெல்லை சந்திப்பு- மதுரை ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே வீட்டில் 3 பேர் உள்பட 5 பேருக்கும், என்.ஜி.ஓ. காலனியில் தாய்- 9 வயது மகனுக்கும், வள்ளியூரில் ஒரே வீட்டில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட அனைவரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 16,543 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று 23 பேர் குணமடைந்ததை தொடர்ந்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,816 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 217 பேர் இறந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 510 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருவதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகர் நல அலுவலர் சரோஜா கூறியதாவது:-

    சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் நெல்லையில் தற்போது குடும்பம், குடும்பமாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் பாளை நகர பகுதிகளில் தொற்று அதிகரித்த நிலையில் தற்போது மேலும் சில இடங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதுவரை பெருமாள்புரத்தில் 5 தெருக்களுக்கும், பேட்டையில் 2 தெருக்களுக்கும், டவுனில் ஒரு தெருவுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆர்.டி.ஓ. அலுவலகம், ஒரு வங்கி மற்றும் 3 பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டு அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    பெருமாள்புரம் பஸ் நிலையத்தில் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பயணிகளின் இருக்கைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் ஏ.டி.எம். மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×