search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணியிடை நீக்கம்
    X
    பணியிடை நீக்கம்

    ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்

    வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 3 ‘விவிபேட்’ எந்திரங்களை 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர்.
    சென்னை:

    ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய என்ஜினீயர் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 3 ‘விவிபேட்’ எந்திரங்களை 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர்.

    விவிபேட்

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அவர்களை மோட்டார் சைக்கிளுடன் சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விரைந்து வந்து 2 பேரிடமும் விசாரித்தனர்.

    இதற்கிடையில் அங்கு வந்த வேளச்சேரி போலீசார், ‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 2 பேரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போலீஸ் ஜீப்பை மறித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை சமாதானம் செய்த போலீசார், போலீஸ் நிலையம் வரும்படி கூறினர். பிடிபட்ட 2 பேரிடமும் போலீஸ் நிலையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி, போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அதில் சென்னை மாநகராட்சி பணியாளர்களான அவர்கள் இருவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் கொண்டு சென்ற ‘விவிபேட்’ எந்திரங்கள் மாற்று எந்திரங்கள் என்பதும், அவை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தபடாதவை என்பதும் தெரியவந்தது. எனினும் இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய உதவி என்ஜினீயர் செந்தில்குமார், சென்னை மாநகராட்சி துப்புரவு மேஸ்திரி வேளாங்கண்ணி, துப்புரவு ஊழியர் சரவணன் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    முன்னதாக என்ஜினீயர் செந்தில்குமாரிடம் போலீசார் சோதனை செய்தபோது ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் இருந்தது. விசாரணையில் அந்த பணம், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வைத்து இருப்பதாக தெரியவந்தது.
    Next Story
    ×