
மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலை பகுதியில் வசிப்பவர் ராஜாமணி அம்மாள் (வயது 86). முதுமை காரணமாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையிலும் அந்த மூதாட்டி வாக்களிக்க விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற அவரது மகன் ஆம்புலன்சில் அவரை ஏற்றிக்கொண்டு ஆரப்பாளையம் தனியார் பள்ளி வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்றார். அங்கு சக்கர நாற்காலியில் மூதாட்டியை அமர வைத்து வாக்குச்சாவடிக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டி ராஜா மணி அம்மாளை தேர்தல் அலுவலர்கள் பாராட்டினர்.
இதுகுறித்து மூதாட்டி ராஜாமணி அம்மாள் கூறுகையில், எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் வாக்களித்து வருகிறேன். எத்தனை தேர்தல்களில் வாக்களித்தேன் என்பது நினைவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் இந்த முறையும் வாக்களிக்க நினைத்தேன். டாக்டர்களின் ஆலோனைப்படி ஆம்புலன்சில் வந்து வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.