search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடமை தவறாத முதியவர்கள்
    X
    கடமை தவறாத முதியவர்கள்

    முககவசம், கையுறை அணிந்து வாக்களித்தனர் - கொரோனா காலத்திலும் கடமை தவறாத முதியவர்கள்

    தேர்தல் என்றால் வாக்குச்சீட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள், விரலில் வைக்கப்படும் மை ஆகியவை நினைவுக்கும் வரும். இந்த தேர்தலில் முககவசம், கையுறை, கிருமிநாசினி சகிதமாக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர்.
    திண்டுக்கல்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றி நடைபெற்றது. தேர்தல் என்றால் வாக்குச்சீட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள், விரலில் வைக்கப்படும் மை ஆகியவை நினைவுக்கும் வரும். இந்த தேர்தலில் முககவசம், கையுறை, கிருமிநாசினி சகிதமாக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இதுதொடர்பாக பல தேர்தல்களை சந்தித்த திண்டுக்கல்லை சேர்ந்த முதியவர்கள் கூறியதாவது:-

    திண்டுக்கல் அசோக்நகர் பொன்ராம் (வயது 75) :- நான் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் ஓட்டுப்போட்டு வருகிறேன். முன்பெல்லாம் வேலைக்கு செல்வோரின் ஓட்டை, வேறுநபர் கள்ளஓட்டாக பதிவு செய்து விடுவார். இதனால் காலையில் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் திரும்பி வந்தால் ஏமாற்றமே மிஞ்சும். எனவே, அதிகாலை 5 மணிக்கே எழுந்து தயாராகி 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு சென்று விடுவோம். இப்போது எல்லாமே எந்திரமயமாகி விட்டது. ஓட்டுப்போடுவது எளிதாக இருப்பதோடு, கள்ளஓட்டும் தடுக்கப்படுகிறது. அதிலும் இந்த தேர்தல் முககவசம், கையுறை அணிந்து வாக்குச்சாவடிக்குள் சென்றது புதுமையாக இருந்தது. கொரோனா காலமாக இருந்தாலும் ஓட்டுப்போடுவது அவசியம்.

    பாலகிருஷ்ணாபுரம் ராஜசேகரன் (70) :- முன்பெல்லாம் தேர்தல் பிரசாரம் முடிந்ததும் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். ஆனால், தற்போதைய சூழலில் தெளிவான முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் குழப்பத்துடன் வாக்களிப்போர் அதிகமாக உள்ளனர். தேர்தலில் நேர்மை என்பது குறைந்து கொண்டே வருவது வேதனையாக இருக்கிறது. வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றி ஓட்டுப்போட்டது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்தது. எனவே, தவறாமல் வந்து ஓட்டுப்போட்டேன்.

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனி சக்திவடிவேல் (67) :-நான் குடிசை மாற்றுவாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளேன். இதனால் தேர்தல் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். வாக்குச்சீட்டு முறையை விட, மின்னணு எந்திரத்தில் விரைவாக வாக்களிக்க முடிகிறது. எத்தனையோ தேர்தல்களை பார்த்தாலும், கொரோனா காலத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் ஓட்டுப்போட்டது வித்தியாசமான அனுபவம். முன்பை விட தற்போது மக்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். பல்வேறு காலகட்டத்தில் பல நோய்கள் பரவி இருக்கின்றன. அதேபோல் கொரோனா பரவுகிறது. இந்த சூழலிலும் ஓட்டுப்போட்டது நல்ல அனுபவம்.

    கோவிந்தாபுரம் குருவம்மாள் (78) :- நான் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ளேன். சர்க்கரை நோயால் கால் பாதிக்கப்பட்ட நிலையிலும், எப்பாடியாவது ஓட்டுபோட்டு விடவேண்டும் என்று நினைத்தேன். எனவே, உதவிக்கு உறவினருடன் வந்து ஓட்டுப்போட்டு விட்டேன். ஒவ்வொரு தேர்தலும் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்துள்ளது. இது கொரோனா காலத்திலும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×