search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்ததை காணலாம்.
    X
    வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்ததை காணலாம்.

    வாக்குச்சாவடி மேற்கூரை விழுந்து 5 வாக்காளர்கள் காயம்

    வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்த வாக்காளர்கள் 5 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையாற்றிவிட்டு தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டிலான் கிராமத்தில் 626 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க அந்த கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று காலை 7 மணிக்கு இங்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்துகொண்டு இருந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக திடீரென வாக்குச்சாவடி நுழைவு வாசலில் மேற்கூரை திடீரென இடிந்து, வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் கண்டிலான் கிராமத்தை சேர்ந்த தாமோதரன் (வயது60), புவனேஸ்வரி (24), முனுசாமி (40), கிருஷ்ணன் (40), முருகன் (61) ஆகிய 5 வாக்காளர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.

    உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, பின்னர் மறுவாசல் வழியாக வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடந்தது. இந்த நிலையில் காயம் அடைந்த 5 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையாற்றிவிட்டு தங்களது வீடுகளுக்கு சென்றனர். அவர்களுக்கு பொதுமக்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×