search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோர்ட்டு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை மறுஆய்வு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு கோர்ட்டு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது என சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியரான கே.வசந்த், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு கோர்ட்டு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. அரசுக்கு எதிராக தொடரப்படும், ரிட் வழக்குக்கு முன்பு ரூ.200 ஆக இருந்த கோர்ட்டு கட்டணத்தை ரூ.ஆயிரமாக உயர்த்தியுள்ளது. அதேபோல், ரிட் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்வதற்கான கட்டணத்தை ரூ.200-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. தமிழகத்தில்தான் கோர்ட்டு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. பழைய கட்டணத்தையே வசூலிக்க ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

    கோப்புபடம்

    இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘கோர்ட்டு கட்டணத்தை உயர்த்த கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, ரிட், ரிட் அப்பீல் வழக்குகளைத் தொடர செலுத்தவேண்டிய கட்டணத்தை அதிகரித்தாலும், வேறு சில வழக்குகளை தாக்கல் செய்ய செலுத்தவேண்டிய கட்டணங்களை குறைத்துள்ளது. கட்டணத்தை உயர்த்தியதை ரத்து செய்தால், அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் இது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் கோர்ட்டு தலையிட முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் கே.எம்.ரமேஷ் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பு பதில்மனுவை படித்துப்பார்த்த நீதிபதிகள், ‘வழக்குகளை தாக்கல் செய்ய செலுத்தவேண்டிய கோர்ட்டு கட்டணத்தை அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. இது கொள்கை முடிவு என்று அரசு கூறுவதால், இதுகுறித்து நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அதேநேரம், இந்த கட்டண உயர்வை தமிழக அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். அரசு இதுகுறித்து முடிவு எடுப்பதற்கு வசதியாக, இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என உத்தரவிட்டனர்.

    Next Story
    ×