search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்த 5 வாக்குசாவடிகள்- மாஞ்சோலையில் ஓட்டுப்பதிவுக்காக சிறப்பு ஏற்பாடு

    தேர்தல் நடைபெறும்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியின் முன்பும் வனத்துறை ஊழியர் ஒருவர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுவார். இதேபோல் 5 வாக்குச்சாவடிகளிலும் வன விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு அணைக்கு மேலே தரைப் பகுதியில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் மாஞ்சோலை உள்ளது.

    சாதாரணமாக அக்னி நட்சத்திர வெயில் காலத்திலும் மாஞ்சோலை, குதிரைவெட்டி, ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்கள் குளிர்ச்சியாகவே காணப்படும். இங்கு ஏராளமான தனியார் கம்பெனிகளின் தேயிலை தோட்டங்கள் இருப்பதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் குடியிருப்புகளுடன் கூடிய வேலையில் அங்கு வசிக்கிறார்கள்.

    கல்லிடைக்குறிச்சியில் இருந்து மலைப்பாதையின் வழியாகச் சென்று மாஞ்சோலைக்கு செல்ல முடியும். கல்லிடைக்குறிச்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் இப்பகுதி உள்ளது. இங்கு தேயிலைத் தோட்ட நிர்வாகம் நடத்தும் தொடக்கப்பள்ளியும், அரசு உயர்நிலை பள்ளியும், அஞ்சலகமும் உள்ளன.

    இந்த பகுதி அம்பை சட்டமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு மொத்தம் 2 ஆயிரத்து 113 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1, 048 ஆண் வாக்காளர்கள், 1,065 பெண் வாக்காளர்கள் அடங்குவர். இங்கு 3-ம் பாலினத்தவர்கள் கிடையாது.

    இங்குள்ள மக்கள் வாக்களிக்க மொத்தம் 5 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாஞ்சோலை பி.பி.டி.சி. தொடக்கப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியும், நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதியில் தலா 2 வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை வாக்குச்சாவடியில் 353 ஆண் வாக்காளர்கள், 346 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 699 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    நாலுமுக்கு பகுதியில் உள்ள 2 வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 755 வாக்காளர்களும், ஊத்து பகுதியில் உள்ள 2 வாக்குச்சாவடியில் 659 வாக்காளர்களும் உள்ளனர். வழக்கமாக ஒரு வாக்குச்சாவடிக்கு 4 தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    அதேபோல் இங்கும் ஒரு வாக்குச்சாவடிக்கு கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்பட 4 பேர் நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தமாக 20 தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் தேர்தல் தொடர்பான ஆவணங்களை கொண்டு செல்ல ஊழியர்கள் மற்றும் மலைப்பகுதிக்கு செல்ல தேவையான வாகன வசதி உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுப்பது வழக்கம்.

    அதன்படி நாளை தேர்தலையொட்டி மாஞ்சோலையில் வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளது. இன்று மாலை மண்டல அலுவலர்கள் தலைமையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரியில் ஏற்றப்பட்டு மாஞ்சோலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அப்போது அவர்களுடன் அங்கு பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்கள் 20 பேரும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பஸ்சில் மாஞ்சோலைக்கு செல்கின்றனர்.

    தொடர்ந்து அவர்கள் அங்கு தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் செய்துள்ளனர். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் நிறைவேற்றுவதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    தேர்தல் நடைபெறும்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியின் முன்பும் வனத்துறை ஊழியர் ஒருவர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுவார். இதேபோல் 5 வாக்குச்சாவடிகளிலும் வன விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    மேலும் இவர்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை மைக் மூலம் வனவருக்கு ஓட்டுப்பதிவு தொடர்பான விபரங்களை தெரிவிப்பார். பின்னர் வனவர் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் அதனை தெரிவிப்பார். ஏதேனும் அசம்பாவிதங்கள், ஓட்டுப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டாலும் அவர் மைக் மூலம் தெரிவிப்பார்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் வனத்துறை ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் 20 தேர்தல் அலுவலர்களையும் பஸ்சில் ஏற்றி பாதுகாப்பாக செக்போஸ்ட் வரை கொண்டு வந்து விடுவார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்புவார்கள். இதற்கான பணிகளை அம்பை தாசில்தார் தலைமையிலான குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இதேபோல் காரையாறு பகுதியில் உள்ள காணிக்குடியில் உள்ளவர்கள் வாக்களிக்க 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அரசு ஊழியர்கள் 12 பேர் பணியில் ஈடுபடுவார்கள். அவர்களும் சென்று வருவதற்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×