search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர்.
    X
    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர்.

    பணப்பட்டுவாடாவை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் மீது தாக்குதல்

    வாணியம்பாடியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும்படை மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமம் செங்கத்து வட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதாகும். இங்கு தி.மு.க.வினர் நேற்று மாலை ஓட்டுக்கு பணம் அளித்துக் கொண்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், போலீசார் ராஜ்குமார், ராஜசேகர் ஆகியோர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடமிருந்து ரூ.56 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து மற்றொரு இடத்தில் பணப்பட்டுவாடா நடப்பதை கேள்விப்பட்டு அங்கு விரைந்து சென்று பட்டுவாடா செய்த பணத்தை பறித்தனர். அப்போது அங்கிருந்த 7 பேர் ஒன்று சேர்ந்து போலீசாரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசாரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தப்பி ஓடியவர்களில் மதனாஞ்சேரியை சேர்ந்த ரவி (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×