search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X
    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    7-ந்தேதிக்கு பிறகு வீடு வீடாக காய்ச்சல் சோதனை- சுகாதாரத்துறை செயலாளர்

    தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சைக்கான மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை தேர்தலில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடிகளில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு கிருமிநாசினி மற்றும் கையுறைகள் வழங்கப்படுகின்றன.

    கடைசி ஒரு மணி நேரத்தில் ஓட்டுபோட வரும் கொரோனா நோயாளிகளுக்கு பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. ஓட்டுபோட வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும். வாக்குச்சாவடியில் முககவசம் இருக்கும் என்று அலட்சியமாக வர வேண்டாம்.

    வாக்குச்சாவடியில் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் செய்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.

    தமிழ்நாட்டில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 3,500-யை கடந்துள்ளது. 85 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் பாதிப்பு 3,500 ஆக உள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தலைமை செயலாளர் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். எங்களை பொருத்தவரை கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை அளிப்பது, அவரோடு தொடர்புடைய 20 முதல் 30 பேரை கண்டுபிடித்து பரிசோதனை செய்வது, அவர்களை தனிமைப்படுத்துவது போன்ற அனைத்தையும் ஏற்பாடு செய்து வருகிறோம்.

    கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணிகள் வருகிற 7-ந்தேதி முதல் தொடங்கும். தற்போது தேர்தல் நடக்க இருப்பதால் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்தால் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் வருகிற 7-ந்தேதி முதல் இந்த பணிகளை தொடங்க உள்ளோம்.

    தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சைக்கான மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. இங்கு படுக்கை வசதிகளும் உள்ளன. ஆனால் கொரோனா பாதித்தவர்கள் நேராக கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு போய் நிற்கிறார்கள்.

    கொரோனா சாதாரண நிலையில் இருக்கும்போது அவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு செல்லலாம். தற்போது சென்னையில் 3 பரிசோதனை மையங்கள் செயல்படுகிறது. தேர்தலுக்கு பிறகு அதை 10 ஆக அதிகரிக்க உள்ளோம்.

    கொரோனா பாதித்த அனைவரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள், ஆஸ்பத்திரிகளில் கொரோனா தீவிரமாக பாதித்த நோயாளிகளுடன் இருக்கக்கூடாது.

    தேர்தலுக்கு பிறகு காய்ச்சல் முகாம்களும் முழு வீச்சில் நடத்தப்பட உள்ளன. தமிழகத்துக்கு 54 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. தினமும் 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு வந்தனர். சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் முழு வீச்சில் ஈடுபடுகிறார்கள்.

    400-க்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் தற்போது தினமும் கொரோனா தடுப் பூசி போடுபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைந்துள்ளது. தேர்தல் இருப்பதால் தடுப்பூசி போட வர மறுப்பதாக கூறுகிறார்கள். கொரோனா தடுப்பூசி போடுவதற்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பதான் மத்திய அரசு நமக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குகிறது. எனவே 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். வருகிற 7-ந்தேதிக்கு பிறகு நாங்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்துவோம்.

    தடுப்பூசி போட்டபிறகும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம். அப்படி வந்தால் அது தீவிரம் அடையாது. ஆனால் தடுப்பூசி போட்ட பிறகு 75 சதவீத அளவுக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படுவதால் பலருக்கு கொரோனா வர வாய்ப்பு இல்லை.

    இதுவரை 32 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தினமும் 3½ லட்சம் பேர் தடுப்பூசி போடுகிறார்கள். நாமும் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டால் நமக்கு நோய் வந்தால் கூட பாதுகாப்பாக இருக்க முடியும்.

    பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். தலைமை செயலாளரின் அறிக்கையின்படி தேவையில்லாத பணிகளுக்கு கட்டுப்பாடுகளை போட வேண்டும். மகாராஷ்டிரா போன்ற நிலைமையை தமிழகம் சந்திக்காமல் இருக்க மக்களுக்கு எந்தபாதிப்பும் இன்றி மக்களின் ஒத்துழைப்போடு சில கட்டுப்பாடுகளை செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் தற்போது 925 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. இங்கு 3-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். அந்த பகுதிகளில் கட்டுப்பாட்டை பலப்படுத்தி அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்களை கொடுக்க வேண்டும். அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும்.

    இறப்பில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள். திருமணத்தில் 600 என்று சொல்லி ஆயிரக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள். மேலும் கலாசார நிகழ்ச்சிகளையும் நாம் கட்டுப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். இது கொள்கை ரீதியான முடிவு.

    தேர்தல் முடிந்ததும் 6-ந் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு என்பது வதந்தி தான் அதை யாரும் நம்ப வேண்டாம். ஆனால் நோய் தன்மை அதிகமாகி வருகிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். முககவசம் அணியாததால் தான் கொரோனா பரவுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    கொரோனாவை தடுக்க படிப்படியான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். பொதுமக்கள் பொது இடங்களுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். நோய் அறிகுறி வரும்போது 3 நாட்களுக்கு பிறகு 104-க்கு போன் செய்கிறார்கள். அப்போது தான் சங்கடம் வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×