search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஸ்ரீரங்கம் சுயேச்சை பெண் வேட்பாளர் காத்திருப்பு போராட்டம்

    தனது குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி ஸ்ரீரங்கம் பெண் சுயேச்சை வேட்பாளர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
    திருச்சி:

    திருச்சி கீழ மேடு இனாம்புலியூரை சேர்ந்தவர் அன்னலட்சுமி (வயது 38). இவர் தற்போது ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் நேற்று திருச்சி டி.ஐ.ஜி. அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது தந்தை வீரமலை (70), சமூக ஆர்வலர். அண்ணன் நல்லதம்பி (45) விவசாயி. அவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு குளித்தலை முதலைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளத்தை சிலர் ஆக்கிரமித்தது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் அரிவாளால் தந்தை-மகன் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

    இதுதொடர்பாக முதலைப்பட்டியை சேர்ந்த 6 பேர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் சரண் அடைந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அப்போது, அன்னலட்சுமியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவும், குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

    21 மாதங்களாக 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுத்து வந்தனர். தற்போது நான் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறேன். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் எனது வயல் தோட்ட வீட்டில் இருந்த எனது தாயை தனிமையில் விட்டுவிட்டு பாதுகாப்பில் இருந்த போலீசார் சென்று விட்டனர். இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. ஆகவே தாங்கள் விலகிக்கொண்ட போலீஸ் பாதுகாப்பை வழங்கினால் மட்டுமே நான் தங்கள் அலுவலகத்திலிருந்து செல்வேன். அதுவரை காத்திருப்பு போராட்டத்தை தொடர்வேன் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இதுகுறித்து மனுவை பெற்று கொண்ட டி.ஐ.ஜி. ஆனி விஜயா அன்னலட்சுமி குடும்பத்திற்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.

    Next Story
    ×