search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் குண்டு வீச்சு (மாதிரி படம்)
    X
    பெட்ரோல் குண்டு வீச்சு (மாதிரி படம்)

    மதுரையில் திமுக தொண்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

    நாளை (6-ந் தேதி) சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் திமுக தொண்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவனியாபுரம்:

    மதுரை மேல அனுப்பானடி, எச்.பி. காலனி, பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் பாண்டி, தி.மு.க. தொண்டர்.

    அதிகாலை இவரது வீட்டில் ரமேஷ் பாண்டி மனைவி பிரியா மற்றும் தாயார் பாண்டியம்மாள், கைக்குழந்தை ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், ரமேஷ் பாண்டி வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியது. இதில் வீட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது.

    சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்று தெரிய வில்லை. ரமேஷ் பாண்டி மீது அட்டாக் பாண்டியுடன் சேர்ந்து நடத்திய கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் பாண்டி, தனது அண்ணனுடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கஞ்சா விற்பனை செய்யும் கும்பலிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதன் எதிரொலியாக கஞ்சா கும்பலைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    நாளை (6-ந் தேதி) சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் தி.மு.க. தொண்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×