search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பின்னலாடை நிறுவனம்
    X
    பின்னலாடை நிறுவனம்

    ஊரடங்கு அச்சம்- ஆர்டர்கள் எடுக்க தொழில்துறையினர் தயக்கம்

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு போடப்படும் என்ற அச்சத்தில் ஆர்டர்கள் எடுக்க தொழில்துறையினர் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது நிதி நிலைக்கு ஏற்ற வகையில் உள்நாடு மற்றும் வெளிநாடு என வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு போடப்பட்டது. இதன் காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு மேல் உற்பத்தியை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு 50 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு, நிறுவனங்கள் இயங்கின. இதன் பின்னர் கொரோனா தொற்று குறைந்ததும் 100 சதவீத தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த கொரோனா ஊரடங்கால் பின்னலாடை துறையினர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.

    இதன் பின்னர் இயல்பு நிலைக்கு பின்னலாடை தொழில் தற்போது தான் மீண்டு ஓரளவிற்கு வந்தது. இதற்கிடையே மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதால், அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாள் ஒன்றின் பாதிப்பு 100-ஐ நெருங்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த கொரோனா ஊரடங்கின்போது அதற்கு முன்னதாக எடுத்துவைத்த ஆர்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆர்டர்களுக்காக தொழில்துறையினர் தயாரித்து வைத்த ஆடைகளையும் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆடை தயாரிப்பாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், மீண்டும் கொரோனாவையொட்டி ஊரடங்கு போடப்படும் என்ற அச்சம் தொழில்துறையினரிடையே ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக புதிய ஆர்டர்களை எடுக்க சிலர் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதுபோல் சில நிறுவனங்கள் உற்பத்தியையும் குறைத்துள்ளன. அதிகளவில் ஆடைகளை தயாரித்து வைத்தால், ஊரடங்கு விதிக்கப்பட்டால் தேக்கமடைந்து விடும் என்பதால் இவ்வாறு ஒரு சில நிறுவனங்கள் உற்பத்தியையும் குறைக்க தொடங்கியுள்ளன.
    Next Story
    ×