search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் வெயிலின் உக்கிரத்தால் மேலூர் 4 வழிச்சாலையில் உருவான கானல் நீர்.
    X
    மதுரையில் வெயிலின் உக்கிரத்தால் மேலூர் 4 வழிச்சாலையில் உருவான கானல் நீர்.

    மதுரையில் வறுத்தெடுக்கும் கோடை வெயில்- 107 டிகிரி பதிவாகியது

    தமிழகத்தில் தர்மபுரி, ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, திருத்தணி மற்றும் வேலூர் ஆகிய 7 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியையும் தாண்டி கொளுத்தியது.
    மதுரை:

    மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. வெயிலின் உக்கிரத்தால் சாலையில் ‘கானல் நீர்' காட்சி தோன்றி மறைவதை பார்க்க முடிகிறது. இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று நடைபெற்ற நிலையில், அனல் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள், விவசாயிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்தவெளியில் மற்றும் ஊர்வலம் செல்லவேண்டாம் என்றும், போக்குவரத்து போலீசார் திறந்தவெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதையும் பொருட்படுத்தாமல், வேட்பாளர்கள் நேற்று இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க நுங்கு, இளநீர், பழச்சாறு, கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, குளிர்பானம், மோர் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களை மக்கள் பருகி வருகிறார்கள். மேலும் தர்ப்பூசனி உள்பட பழங்களையும் சாப்பிட்டு உஷ்ணத்தை தணித்து வருகிறார்கள். இதனால் சாலையோரம் தற்காலிகமாக முளைத்த குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    கோடையின் உச்சமான, அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், வெயில் உச்சி மண்டையை பிளந்து வருகிறது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதனை சமாளிப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எடுத்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் தர்மபுரி, ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, திருத்தணி மற்றும் வேலூர் ஆகிய 7 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியையும் தாண்டி கொளுத்தியது. ஈரோடில் அதிகபட்சமாக 108 டிகிரி பதிவாகியது. இதையடுத்து மதுரையில் 107 டிகிரியும், திருச்சியில் 106 டிகிரியும், சேலத்தில் 105 டிகிரியும், தர்மபுரியில் 104 டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியும், வேலூரில் 101 டிகிரியும் வெயில் பதிவாகியது.

    இந்தநிலையில், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெற்கு மற்றும் தென் கிழக்கு திசைகளில் இருந்து காற்று, தமிழக பகுதிகளில் வீச வாய்ப்பு உள்ளது. இதனால் 5-ந் தேதி (இன்று), 6-ந் தேதி (நாளை) ஆகிய நாட்களில் சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கோவையில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விடவும் 37 முதல் 39 டிகிரி (பாரன்ஹீட்) உயரக்கூடும்.

    இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனைய வட கடலோர மாவட்டங்களில் 35 முதல் 37 டிகிரி (பாரன்ஹீட்) வரை வெப்பநிலை உயரக்கூடும்.

    வளிமண்டலத்தில் 1 கி.மீ. உயரம் வரையிலும் சுழற்சி நிலவுகிறது. இதனால் 5-ந் தேதி (இன்று) வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நேற்று பிற்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×