search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பணம்
    X
    பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பணம்

    திருப்பூர் நூற்பாலை உரிமையாளர் உள்பட 10 போிடம் ரூ.1½ கோடி பறிமுதல்

    நூற்பாலை உரிமையாளர் உள்பட 10 பேரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 கோடியே 48 லட்சத்து 81 ஆயிரத்து 708 பறிமுதல் செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூரில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிகள் அனைத்தும் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர். இதுபோல் தேர்தல் நெருங்கியதால் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பதால் அதிகாரிகளின் சோதனை தீவிரமடைந்துள்ளது.

    இந்த நிலையில் பறக்கும் படை அதிகாரி மைதிலி தலைமையிலான அதிகாரிகள் நேற்று பூலுவப்பட்டி சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பூலுவப்பட்டியை சேர்ந்த நூற்பாலை உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் (வயது 49) என்பவர் இருந்தார்.

    அந்த காரை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் ரூ.70 ஆயிரம் இருந்தது. இதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்து வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுபோல் பறக்கும் படை அதிகாரி சுனில் கவுசிக் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன், போலீஸ் காமராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக அந்த வழியாக வந்தார். எனவே அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியை சேர்ந்த பாண்டியராஜன் (19) என்பதும், அவரிடம் ரூ.69 ஆயிரத்து 500 இருந்ததும் தெரியவந்தது. இதற்கான ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 2 பேரிடமும் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    காங்கேயம் நகரம், தேவாங்கபுரம் பகுதியில் சுந்தரம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மதியம் 1 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து சென்ற காங்கேயம், ஏ.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (75) என்பவரைச் சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.83 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது. இந்தப் பணத்தை பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் காங்கேயம் அருகே, தாராபுரம் சாலை, ஜே.நகர் பகுதியில், ஜெகநாதன் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை குழுவினர் நேற்று மாலை 3.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த காங்கேயம் அருகே, ஊதியூர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (55) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற பணம் ரூ.1 லட்சத்து 84ஆயிரம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் காங்கேயம் தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் காங்கேயம் சார்நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

    இதுபோல் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.வி.ஆர்.நகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்த நாட்டுத்துரை (36) என்பவரிடம் சோதனையிட்டனர். இதில் அவரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.69 ஆயிரத்து 160-ஐ பறிமுதல் செய்தனர். மேலும், நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பறக்கும் படை அதிகாரி பிரபா தலைமையிலான அதிகாரிகள் ஏ.பி.டி. ரோடு பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக செக்யூர் வேலிங் இந்தியா லிமிடெட் நிறுவன மினி வேனில் பெரியசாமி (36) என்பவர் வந்தார். அவரிடம் ரூ.1 கோடியே 44 லட்சத்து 81 ஆயிரத்திற்கு உரிய ஆவணம் இல்லாமல் பணம் இருந்ததால் அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர்.

    மேலும், கணபதிபாளையத்தில் பறக்கும் படை அதிகாரி சாந்தி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையின் போது சந்திராபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (63) என்பவரிடம் இருந்த ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். காட்டுவலவு பகுதியில் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது வள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்த தனபால் (38) என்பவரிடம் இருந்து ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

    வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர்- கணக்கம்பாளையம் அருகே பறக்கும் படை அதிகாரி முத்துராமலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் காந்திநகரை சேர்ந்த சாலமன் என்பவரிடம் இருந்த ரூ.68 ஆயிரத்து 370-ஐ பறிமுதல் செய்தனர். இதுபோல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் வஞ்சிபாளையம் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஜெயச்சந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 178-ஐ பறிமுதல் செய்தனர்.

    இதன்மூலம் பல்வேறு இடங்களில் மொத்தம் ஒருகோடியே 48 லட்சத்து 63 ஆயிரத்து 708 ரூபாய் உரிய ஆவணங்கள் இல்லாததால் கைப்பற்றப்பட்டது.
    Next Story
    ×