search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணி
    X
    தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணி

    5 சட்டசபை தொகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு 1,200 போலீசார் - கலெக்டர் கார்த்திகா தகவல்

    தர்மபுரி மாவட்டத்திலுள்ள தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
    தர்மபுரி:

    தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த பணிக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். காவல் பார்வையாளர் சக்கிராலா சாம்பசிவராவ் முன்னிலை வகித்தார்.

    அப்போது கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:-

    தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 870 மையங்களில் 1,817 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஒரு போலீஸ்காரர் நியமிக்கப்பட உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 35 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 304 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 1,200 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இதேபோல் 576 துணை ராணுவ வீரர்கள், 624 நாட்டு நலப்பணி மாணவர்கள், 329 ஊர்க்காவல் படை வீரர்கள், 295 வெளிமாநில ஊர்க்காவல் படை வீரர்கள், 300 ஆந்திர மாநில காவலர்கள், 32 வனக்காவலர்கள், 6 ஓய்வு பெற்ற வனக்காவலர்கள், 35 தீயணைப்பு படை வீரர்கள், 9 ஓய்வு பெற்ற தீயணைப்பு படை வீரர்கள் உள்பட மொத்தம் 3,700 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இவ்வாறு கலெக்டர் கார்த்திகா பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் உள்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×