search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறை
    X
    வருமான வரித்துறை

    ஓ.பன்னீர்செல்வம் உதவியாளர் வீட்டில் ஐ.டி.சோதனை- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தங்க தமிழ்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார்.

    பலத்த போட்டி நிலவும் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக தி.மு.க. மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் புகார்கள் அளித்த வண்ணம் இருந்தனர்.

    போடி சுப்புராஜ் நகரில் அ.தி.மு.க. அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு அருகில் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளரும், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளருமான குறிஞ்சி மணி வீடு உள்ளது. இன்று காலை 9 மணி அளவில் இந்த வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் 2 கார்களில் வந்தனர். அவர்களுடன் துணை ராணுவ வீரர் மற்றும் போலீசார் சென்றனர்.

    அதிகாரிகள் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது வீட்டில் குறிஞ்சி மணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்த வந்திருப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகு அதிகாரிகள் அவர்களது செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்தவர்கள் வெளியே செல்லவும், வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லவும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு முழுவதும் அனைத்து அறைகளிலும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனை பற்றி அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் வேகமாக தகவல் பரவியது. இதையடுத்து அவர்கள் குறிஞ்சி மணி வீட்டு முன்பு திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    சோதனையை முடித்துக் கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியே வந்தால்தான் வீட்டில் பணம் ஏதும் சிக்கியதா? என்பது பற்றி தெரியவரும்.

    ஏற்கனவே ஆண்டிபட்டி அ.தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளர் அமரேசன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.2.17 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து பாப்பம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் தொகுதி செயலாளர் ஈஸ்வரி முருகன், தே.மு.தி.க. நகர செயலாளர் பாலாஜி, தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகளான சக்கம்பட்டி தேங்காய் ராஜா, நாச்சியார்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் வீடுகளிலும் நேற்று வருமான வரித்துறை சோதனை நடத்தி முடித்து விட்டு இன்று அதிகாலை சென்றனர். இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.

    ஆண்டிபட்டி அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன் தேர்தல் பிரசாரத்தின் போது தன்னுடன் வந்த வாகனத்தில் அனுமதியின்றி பணம் எடுத்து வந்ததாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உடன் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஓ பன்னீர்செல்வம்

    தொடர்ந்து தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் சூழ்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் உதவியாளர் வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர்.

    பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

    இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் அதிரடி வாகன சோதனை நடத்தி கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இதேபோல் வருமான வரித்துறைக்கு வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று சென்னை நீலாங்கரை பகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் ஆகியோர் வசித்து வரும் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அண்ணா நகர், கரூர் தி.மு.க. வேட்பாளர்கள் வீடுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உதவியாளர் வீட்டில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×