என் மலர்

  செய்திகள்

  சுங்கச்சாவடி
  X
  சுங்கச்சாவடி

  26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது- வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுங்கச்சாவடி கட்டண உயர்வால் லாரி வாடகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்வதற்கு வழி ஏற்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
  சென்னை:

  நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன.

  இதில் தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.

  இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

  இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

  கோவை கன்னியூர், திருத்தணி பட்டறை பெரும்புதூர், திருவள்ளூர் சூரப்பட்டு, வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், தூத்துக்குடி கிருஷ்ணகிரி சாலை புதூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.

  வேலூர் பள்ளிகொண்டா, வாணியம்பாடி மற்றும் விருதுநகரில் உள்ள எட்டூர்வட்டம், மதுரை கப்பலூர், நாங்குநேரி, புதுக்கோட்டை சிட்டம்பட்டி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

  திண்டிவனத்தில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ஒருமுறை செல்வதற்கு கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ரூ.60 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகுரக சரக்கு வாகனம், மினி பஸ்களுக்கு ரூ.95 கட்டணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. பஸ் மற்றும் டிரக் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.195-ல் இருந்து 200ஆக உயர்ந்துள்ளது. பெரிய வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.210-ல் இருந்து 220 ஆகவும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.305-ல் இருந்து ரூ.315 ஆகவும், மிகவும் பெரிய வாகனங்களுக்கு ரூ.370-ல் இருந்து ரூ.385 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.30 வரையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

  வானகரம் சுங்கச்சாவடியில் லாரி, ஆம்னி பஸ்சுக்கான கட்டணம் ரூ.145-ல் இருந்து ரூ.150ஆகவும், வர்த்தக வாகனங்களுக்கு ரூ.160-ல் இருந்து ரூ.165 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.225-ல் இருந்து ரூ.230 ஆகவும், பெரிய வாகனங்களுக்கு ரூ.275-ல் இருந்து ரூ.285 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

  இந்த சுங்கச்சாவடி வழியாக ஒருமுறை ஆம்னி பஸ் செல்வதற்கான கட்டணம் ரூ.220-ல் இருந்து ரூ.225 ஆக அதிகரித்துள்ளது.

  இதேபோன்று சூரப்பட்டில் உள்ள சுங்கச்சாவடியில் அதிரடியாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக சரக்கு வாகனங்கள், மினி பஸ் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.95-ல் இருந்து ரூ.100-ஆக உயர்ந்துள்ளது.

  ஆம்னி பஸ் கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.210ஆகவும், கனரக வாகனம் ரூ.315-ல் இருந்து 325 ஆகவும் உயர்ந்துள்ளது.

  இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நெருக்கடியில் இருந்து ஓரளவுக்கு மீண்டு வரும் நிலையில், சுங்கச்சாவடிகளின் இந்த கட்டண உயர்வு கூடுதல் சுமையாக இருக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறும்போது, ‘‘தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது விதிமீறல் ஆகும். பாஸ்டேக் முறை கொண்டு வந்தால் வருவாய் உயரும் என்று தெரிவித்திருந்த மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது’’ என்று தெரிவித்தார்.

  எனவே மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகளையும் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

  சுங்கச்சாவடி கட்டண உயர்வால் லாரி வாடகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்வதற்கு வழி ஏற்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×