search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை வெயில்
    X
    கோடை வெயில்

    சென்னை புறநகர்களை இன்று வறுத்தெடுத்த கொடூர வெயில்

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்த ஒரு வாரத்துக்கு திறந்தவெளி வேலைகளில் ஈடுபடுவதை மதியம் 12 மணியில் இருந்து 4 மணி வரையில் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மாதம் (மார்ச்) இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்தநிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கோடை வெயில் வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது.

    சென்னையில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இதன்படிநேற்று அதிகபட்ச வெயில் வாட்டி எடுத்தது. இதன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மோட்டார் சைக்கிள்களில் மதிய வேளையில் வெளியில் செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    குறிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்கள் வெப்பத்தின் பிடியில் தவித்தனர்.

    அதிக வெயில் காரணமாக தலை மற்றும் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து கடும் சோர்வு ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையோர கடைகளுக்கு சென்று இளநீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி குடிப்பது அதிகரித்துள்ளது.

    அதற்கு ஏற்றவகையில் சாலையோரங்களில் மோர், சர்பத் கடைகளும் அதிகரித்துள்ளன.

    வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுவதால் வருகிற 4-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாம்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இயல்பை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த 27 மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    வருகிற 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்த ஒரு வாரத்துக்கு திறந்தவெளி வேலைகளில் ஈடுபடுவதை மதியம் 12 மணியில் இருந்து 4 மணி வரையில் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×