search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு போலி ஆணையுடன் வந்த வாலிபர் கைது

    திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு போலி ஆவணம் மூலம் வி.ஏ.ஓ. வேலைக்கு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயபிரீதா நேற்று முன்தினம் பணியில் இருந்தார். அப்போது ஒரு வாலிபர் வந்து தனக்கு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், பணியில் சேர கலெக்டர் அலுவலகத்திலிருந்து பணி ஆணை வழங்கப்பட்டதாகவும் கூறி பணி ஆணையை அளித்தார்.

    அதை பார்த்த ஜெயபிரீதா அதிர்ச்சி அடைந்தார். அந்த ஆணை போலி என்பதும், அதில் போலி முத்திரையிட்டு முந்தைய கலெக்டர் சிவராசுவின் போலி கையெழுத்திருந்ததும் தெரியவந்தது.

    இதுபற்றி ஜெயபிரீதா திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அந்த வாலிபர் பெயர் ராமகிருஷ்ணன் (வயது 25) என்பதும், சேலம் மாவட்டம் ஆத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ராமசுந்தரம் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் என்பதும் தெரியவந்தது.

    இவர் சமீபத்தில் நடந்த கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணிக்கான தேர்வு எழுதியுள்ளார். அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது இவரை அணுகிய சேலத்தை சேர்ந்த 2 புரோக்கர்கள், பணம் கொடுத்தால் வி.ஏ.ஓ. வேலை வாங்கிவிடலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    இதனால், அவர்களிடம் பல லட்சத்தை ரமேஷ்கிருண்ணன் அளித்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தரவில்லை. தற்போது தேர்தல் நேரத்தில் வி.ஏ.ஓ.-க்கள் நியமிக்கப்பட்டதை அறிந்த ரமேஷ்கிருஷ்ணன் புரோக்கர்களிடம் கேட்டுள்ளார்.

    அதனால் அவரது தொல்லை தாங்க முடியாததால் போலி பணி ஆணை தயார் செய்து, அதில் போலியாக திருச்சி கலெக்டரின் கையெழுத்தை போட்டு, அரசின் போலி முத்திரை வைத்து கொடுத்தனுப்பியது தெரியவந்தது.அதையடுத்து போலீசார் ரமேஷ் கிருஷ்ணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ரமேஷ் கிருஷ்ணனிடம் பல லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிய புரோக்கர்கள் யார்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×