search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2.38 டன் மஞ்சள் பறிமுதல் - 4 பேர் கைது

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2.38 டன் மஞ்சளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள், மிளகு, சீரகம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இலங்கையில் மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்களுக்கு அந்த நாட்டு அரசு கூடுதல் சுங்கவரியை விதித்துள்ளது. இதனால் இந்த பொருட்கள் அங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

    எனவே, இலங்கை வியாபாரிகள் இந்த பொருட்களை சுங்கவரி இல்லாமல் இந்தியாவில் இருந்து கடத்தினால் அதிக லாபம் பெறலாம் என்ற நோக்கத்தில் இங்குள்ள புரோக்கர்களை வைத்து மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவதாக புகார்கள் வருகின்றன.

    இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து விரலி மஞ்சள் கடத்தப்பட இருப்பதாக நேற்று முன்தினம் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கியூ பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தங்கராஜ், வேலாயுதம், வில்லியம் பெஞ்சமின் மற்றும் ஏட்டுகள் இருதயராஜ், குமார் ஆகியோர் நேற்று அதிகாலை தூத்துக்குடி கடலோரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாலை 2.30 மணிக்கு ஈரோட்டில் இருந்து மினிலாரி ஒன்று கடலோரத்தில் வந்து நின்றது. அதில் இருந்து 5 பேர் மஞ்சள் மூட்டைகளை கடலில் நிறுத்தப்பட்டிருந்த வல்லத்தில் ஏற்றினர். உடனே, கியூ பிரிவு போலீசார் அந்த மினி லாரியையும், வல்லத்தையும் சுற்றி வளைத்து அந்த 5 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    இதில் ஒருவர் தப்பியோடி விட்டார். விசாரணையில் அவர்கள், தொட்டியம் வடக்கு தெருவைச் சேர்ந்த தண்டபாணி (25), மினி லாரி உரிமையாளரான திருச்சி அருகே மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நூருல்அமீன் (37), திருப்பூர் ராக்கியபாளையம் ஆர்.கே.சி. தோட்டத்தைச் சேர்ந்த முருகேஷ் (24), தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (49) என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து வல்லத்தில் ஏற்றியிருந்த 27 விரலி மஞ்சள் மூட்டைகளும், மினி லாரியில் இருந்த 43 மூட்டைகளும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இந்த பொருட்களை மரைன் போலீசாரிடம் கியூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். ஒரு மூட்டையில் 34 கிலோ விரலி மஞ்சள் இருந்தது. மொத்தம் 2.38 டன் விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×