search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கும் பணி நடந்தபோது எடுத்த படம்.
    X
    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கும் பணி நடந்தபோது எடுத்த படம்.

    கரூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 3,180 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

    கரூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 3,180 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    கரூர்:

    தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வீதம் பயன்படுத்தும் வகையில் ஏற்கனவே 1,530 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,530 கட்டுப்பாட்டு கருவிகளும், 1,645 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்களும் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு, கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதுகாப்பாக கடந்த 7-ந்தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டது.

    தற்போது இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில், சட்டமன்ற தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கு சேர்த்து மொத்தம் 12 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக பயன்படுத்தும் நிலை உள்ளது.

    அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே கூடுதலாக இருப்பில் உள்ள 680 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கூடுதலாக 2,500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 3,180 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இதனையடுத்து நேற்று கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான கணினி குலுக்கல் முறை தேர்வு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மலர்விழி தலைமையிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. அப்போது அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு 744 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கரூர் சட்டமன்ற தொகுதிக்கு 1,704 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 357 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு 375 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் என மொத்தம் 3,180 கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தேர்வு செய்யப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு கணினிமுறை குலுக்களின் அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்றது.

    இதில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் பிரபாகரன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பிரபு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×