search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறை
    X
    வருமான வரித்துறை

    நாகர்கோவிலில் இன்று அதிகாலை அமெரிக்க என்ஜினீயர் வீட்டில் ரூ.88 லட்சம் பணம் பறிமுதல்

    குமரி மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் என்ஜினீயர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

    இதுபோல வருமான வரித்துறையினரும் வங்கிகளில் அதிக பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை ரகசியமாக கண்காணித்து வருகிறது. மேலும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகளுக்கு அதிரடியாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் இன்று அதிகாலை நாகர்கோவில் ஜெகநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்றனர். அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வீட்டில் வசித்து வருபவர் தனலெட்சுமி. அவரது மகன் ராஜேஷ். என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் வரிஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் பேரில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    அதிகாலையில் சென்ற அதிகாரிகள் பலமணி நேரம் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அதோடு லட்சக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த பணம் ரூ.88 லட்சம் எனக்கூறப்படுகிறது. இந்த பணத்தை ராஜேஷ் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது ஏன்? என்பது பற்றி அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் என்ஜினீயர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை ரூ. 3 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×