search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்வராஜ்
    X
    செல்வராஜ்

    கிணத்துக்கடவு அருகே தாராபுரம் காவலாளி கல்லால் அடித்து கொலை

    கிணத்துக்கடவு அருகே தாராபுரம் காவலாளியை அடித்து கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    கிணத்துக்கடவு:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கி பாளையத்தில் சர்வோதயா சங்கத்துக்கு சொந்தமான காந்தி பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் கட்டில் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தூரம்பாடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 55) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் தனது மனைவி சித்ராவுடன் (53) அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து வேலை செய்தார்.

    30 ஏக்கர் கொண்ட இந்த பண்ணைக்குள் 3 வீடுகள் மட்டுமே உள்ளன. வழக்கமாக இரவு 10 மணிக்கு அந்த பண்ணையின் மெயின் கேட்டை செல்வராஜ் மூடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் செல்வராஜ் புறப்பட்டார்.

    ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சித்ரா, தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர் எடுத்து பேசவில்லை.

    இந்த நிலையில் இரவில் சித்ராவின் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. வழக்கமாக செல்வராஜ் கதவை தட்டும்போது சித்ராவின் பெயரை சொல்லி அழைத்து தட்டுவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக கதவு தட்டப்பட்டதால் அவர் திறக்கவில்லை. அதற்கு பதிலாக அருகே உள்ள சரஸ்வதி என்பவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். உடனே அவர் தனது மகன் ஸ்ரீகாந்தை அங்கு அனுப்பி வைத்தார். அப்போது சித்ரா வீட்டின் முன்பு நின்றிருந்த 2 பேர், ஸ்ரீகாந்தை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

    இதையடுத்து சித்ரா, ஸ்ரீகாந்த், சரஸ்வதி மற்றும் 3 வீடுகளை சேர்ந்தவர்கள் அவர்களை துரத்தினார்கள். அப்போது அந்த பண்ணையின் கேட் அருகே தலையில் கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, துணை போலீஸ சூப்பிரண்டு சீனிவாசலு, கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அத்துடன் அவர்கள் பிணமாக கிடந்த செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் செல்வராஜ் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. மேலும் சித்ரா வீட்டின் கதவை தட்டிய 2 நபர்கள் யார்? அவர்களுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.

    இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட செல்வராஜ்-சித்ரா தம்பதிக்கு கார்த்திக், ஆனந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×