search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வசந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியதை படத்தில் காணலாம். (உள்படம்: பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெய் கேன்).
    X
    வசந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியதை படத்தில் காணலாம். (உள்படம்: பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெய் கேன்).

    தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்- பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

    கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு செல்கின்றனர்.

    நேற்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலக பெட்டியில் போடுவதற்காக அதிகளவில் வந்து சென்றனர். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனின் மனைவி வசந்தி (வயது 31) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக சுப்பிரமணியனை விட்டு பிரிந்து, துறைமங்கலத்தில் உள்ள தனது பாட்டி கருப்பாயியுடன் வசந்தி வசித்து வந்தார். வசந்தியுடன் மீண்டும் சேர்ந்து வாழ சுப்பிரமணியன் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வசந்தியின் பாட்டி கருப்பாயி இறந்து விட்டார். இதனால், ஏற்கனவே பெற்றோர் இறந்து விட்டநிலையில், தனக்கு அரவணைப்பாக இருந்த பாட்டி கருப்பாயியும் இறந்து விட்டதாலும், கணவர் சேர்ந்து வாழாததாலும் மனமுடைந்த வசந்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்தது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வசந்தி தன்னை எப்படியாவது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீசாரிடம் மண்டாடினார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பழைய சிவில் கோர்ட்டு தெருவை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலக பெட்டியில் போட்ட மனுவில், எங்கள் தெருவில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தெருவில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. குடிநீரும் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. இதனை கண்டித்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கூறியிருந்தனர்.
    Next Story
    ×