search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது

    ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், வீட்டின் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற அம்பத்தூர் பெண் தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    திரு.வி.க. நகர்:

    சென்னை முகப்பேர் எபினேசர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மோகன் கேப்ரியல் (வயது 67). இவர், காவல்துறையில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இன்ஸ்பெக்டராக பணி செய்து ஓய்வுபெற்றவர். இவர், தனது வீட்டின் பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.

    அதற்கான அனைத்து ஆவணங்களும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ஆய்வு பணியும் முடிக்கப்பட்டது. ஆனால் தாசில்தார் கையெழுத்து போடாமல் நிறுத்தி வைத்திருப்பதாக மோகன் கேப்ரியலிடம் கிராம உதவியாளர் முருகன்(32) தெரிவித்தார்.

    இதுகுறித்து அம்பத்தூர் தாசில்தார் பார்வதி(50) என்பவரிடம் மோகன் கேப்ரியல் கேட்டார். அதற்கு அவர், ரூ.80 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து தரப்படும் எனவும், அதில் முதல் கட்டமாக ரூ.40 ஆயிரம் தரும்படியும் கேட்டதாக தெரிகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரான மோகன் கேப்ரியல், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். பெண் தாசில்தாரை கையும் களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூ.40 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து லஞ்சமாக அவரிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தி அனுப்பினர்.

    அதன்படி அந்த பணத்தை வாங்கிய மோகன் கேப்ரியல், தாசில்தார் பார்வதியிடம் கொடுக்க அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் சென்றார். லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு மறைந்து இருந்தனர்.

    அம்பத்தூர் மண்டலத்தில் தற்போதைய தேர்தல் சிறப்பு அதிகாரியாக இருக்கும் பார்வதி, மதிய உணவு சாப்பிட தாசில்தார் அலுவலகம் வந்தார். அவரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.40 ஆயிரத்தை லஞ்சமாக மோகன் கேப்ரியல் கொடுத்தார். அதை அங்கு இருந்த கிராம உதவியாளர் முருகனிடம் கொடுக்குமாறு பார்வதி கூறினார்.

    அதன்படி மோகன் கேப்ரியலிடம் இருந்து முருகன் லஞ்ச பணத்தை வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று பெண் தாசில்தார் பார்வதி மற்றும் முருகன் இருவரையும் கைது செய்தனர். இரவு நீண்டநேரம் வரை தாசில்தார் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் திருவள்ளூரில் உள்ள பார்வதி வீட்டிலும், மதுரவாயலில் உள்ள முருகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார், கைதான இருவரையும் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×